நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளைவரை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29 தேதி தொடங்கியது. அன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் ஒருநாள் முன்னதாக முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாடாளுமன்றம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் முடங்கி வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கே நிலவி வருகிறது. மாநிலங்களை எம்.பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் மிகப்பெரிய பூதாகரத்தை உண்டு பண்ணியுள்ளது. 


இந்நிலையில்தான் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெரிக் பிரைன் மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவையின் மாண்பை மீறும் வகையில் நடந்து கொண்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 12 பேர் இப்போது ஒருவர் என்பதால் மோதல் அதிகரிக்கூடிய சூழலே நிலவி வந்தது. இதனால் இன்று எந்த அவை நடவடிக்கைகளும் நடைபெறாது என்று நினைத்த மத்திய அரசு கூட்டத்தொடரை ஒருநாள் முன்னதாகவே முடித்து கொண்டுள்ளது. 


காலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மக்களவைக்கு வந்தனர். அப்போது 18 மணிநேரம் வீணானது எனக்கூறி அவைத் தலைவர் ஓம் பிர்லா மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தார். லக்கிம் பூர் கேரி வன்முறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிருந்தனர். இதனால் ஏற்கெனவே எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்குமிடையே கடுமையான மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில்தான் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


அதேபோல் மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். 


ஏற்கெனவே ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், பெண்ணின் திருமண வயது 21 ஆக அதிகரிக்கும் மசோதா மீதான விவாதம் முடிவுபெற்று நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு கூடுதல் செலவினங்களுக்காக அரசு தாக்கல் செய்திருந்த மசோதா மக்களவையின் ஒப்புதலை பெற்றுவிட்டது. வேறு எந்த அவசர மசோதாவும் நிலுவையில் இல்லை. இதன்காரணமாகவும் எதிர்க்கட்சிகள் வேறு அலுவல் வேலைகளை பார்க்க விடாது எண்ணியும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


 


மேலும் வாசிக்க: ஒமிக்ரான் வைரஸ் - வருகிறதா ஊரடங்கு.... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சொல்வது என்ன?