நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 


சிறப்பு கூட்டத்தொடர் 


கடந்த வாரம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. பொதுவாக, முக்கியமான காரணங்களுக்காகதான் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும் என்பதால் தற்போது எதற்காக கூட்டத்தொடர் அறிவிப்பு வெளியானது என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் இந்தியா என்ற பெயர் ஜி20 மாநாட்டின் போது பாரத் என உச்சரிக்கப்பட்டது. இதனால் இந்தியா என்ற நாட்டின் பெயர் மாற்றப்படுவதற்காக சிறப்பு கூட்டத்தொடர் நடக்க உள்ளதா என பலரும் கேள்வி எழுப்பினர்.


இதனிடையே இந்த சிறப்பு கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படாததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி  வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த சிறப்பு கூட்டம் குறித்து நாடாளுமன்ற செய்தி இதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, இந்த சிறப்பு கூட்டத் தொடரின் முதல் நாள் அரசியல் சாசன நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதில், நாடாளுமன்ற சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.


மேலும் மழைக்கால கூட்டத் தொடரின்போது மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட  தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள்  பதவி நியமன மசோதா, வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, நாளிதழ்கள், பருவ இதழ்கள் பதிவு மசோதா, அஞ்சல் அலுவலக மசோதா, புழக்கத்தில் இல்லாத சட்டங்களை ரத்து செய்யும் மசோதா ஆகியவை குறித்து விவாதம் நடைபெறும் என சொல்லப்படுகிறது. 


சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெறவுள்ள நிலையில், 2வது நாளில் இருந்து புதிய கட்டிடத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் பாஜக உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக தலைமை கொறடா உத்தரவிட்டுள்ளார். 


அனைத்துக் கட்சிகளின் கூட்டம் 


இந்நிலையில் இன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து விளக்கமளிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது விவாதிக்கப்பட உள்ளது. 




மேலும் படிக்க: SIIMA Awards 2023: ‘மேடையை அலறவிட்ட தமிழ் படங்கள்’ .. சைமா (SIIMA) விருதுகளை அள்ளிய பிரபலங்கள்..!