"ஜனநாயகத்தின் தாயகமாக இந்தியா திகழ்கிறது" என பல முறை பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஆங்கிலேயர்களின் ஆட்சியை தொடர்ந்து ஜனநாயகத்தை பற்றி கொண்ட இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்காது என பல வரலாற்றாசிரியர்கள் எச்சரித்தனர். ஆனால், பல சவால்களை கடந்து இந்தியாவில் ஜனநாயகம் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கிறது.
பிரதமராக மோடி பதவியேற்றது இந்திய ஜனநாயகத்தின் வெற்றியாக கருத வேண்டும். அவருக்கு பின், ஒரு மிகப்பெரிய அமைப்பும் கட்சியும் இருந்த போதிலும், இந்திய ஜனநாயகம் எந்தளவுக்கு பரிணமித்திருக்கிறது என்பதற்கு மோடியின் வெற்றியே சாட்சி. அதுமட்டும் இன்றி, சுதந்திர இந்திய வரலாற்றில் பிரதமர் மோடிக்கு இணையான செல்வாக்கு யாருக்கும் இருந்ததில்லை.
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் 15 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக பதவி வகித்தாலும் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு என்பது தனித்துவமானது. ஆராயப்பட வேண்டியது. இந்திய ஜனநாயகத்தின் வலிமையை பயன்படுத்தி உலக தலைவராக உருவெடுத்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் அவரால் நிகழ்ந்த மாற்றங்களை தொகுத்து 'Seva, Sushasan, Garib kalyan' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.
ஏழை மற்றும் விளிம்புநிலை மக்கள்:
கடந்த 9 ஆண்டுகளில், முத்ரா முதல் ஸ்டாண்ட் அப் இந்தியா வரை, இந்தியர்களை மேம்படுத்தும் வகையில் பல சமூக நல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டை கொரோனா தொற்று தாக்கியதில் இருந்து 80 கோடி மக்கள் பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களைப் பெற்று வருகின்றனர்.
ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் 11.72 கோடி கழிவறைகள் கட்டப்பட்ட நிலையில், 11.8 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
2014 முதல் அமல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அந்த்யோதயா (யாரும் பின்தங்கிவிடக்கூடாது) கொள்கையால் உந்துதல் பெற்றன. ஒவ்வொரு திட்டமும் 100 சதவிகித பயனர்களை சென்ற அடைய வேண்டும் என அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.
48 கோடிக்கும் அதிகமான ஜன்தன் கணக்குகள் அரசால் தொடங்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான மக்களுக்கு எல்பிஜி இணைப்புகள், மின்சாரம், இன்சூரன்ஸ், நேரடி பணப் பரிமாற்றம் போன்றவற்றை சென்று சேர்ந்ததாக 'Seva, Sushasan, Garib kalyan' புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேளாண்மை:
இன்று, இந்திய விவசாயி இந்தியாவுக்காக மட்டும் பயிரிடவில்லை என்றும் உலக நாடுகளையே தங்கள் தயாரிப்புகளுக்கான சந்தையாக பார்க்கின்றனர் என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் மூலம் வருமான ஆதரவை மத்திய அரசாங்கம் வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு நேரடி பயன் பரிமாற்றம் மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 ரொக்கப் பரிமாற்றத்தை உறுதி செய்துள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் விவசாய பட்ஜெட் 5.7 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் நெல்லுக்கான முதன்மை PM-KISAN MSP கட்டணத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
வெளியுறவு கொள்கை:
மோடி அரசுக்கு தேசிய பாதுகாப்பே முதன்மையாக உள்ளது. இது, இந்தியாவிற்கு வெளியே நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் மூலமாகவும் உள்நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.
அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்திய வெளியுறவு கொள்கைகளை வகுப்பதில் மோடி அரசு கவனமாக இருந்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில், போரினால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான குடிமக்களை இந்தியா மீட்டுள்ளது. மிக சமீபத்தில், சூடானில் இருந்து 3,000 குடிமக்களை திரும்ப அழைத்து வந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு ஏற்றுமதியில் 334 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில், பாதுகாப்பு துறையின் உள்நாட்டு உற்பத்திக்காக 75% மூலதன கையகப்படுத்தல் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜி20 உச்சி மாநாட்டை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில், மேற்குலக நாடுகளையும் ரஷியாவையும் கையாண்ட விதம் வெகுவான பாராட்டுகளை பெற்றது.