நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை பலமுறை மறைமுகமாக சாடினார்.


சிறப்புக் கூட்டத்தொடர்:


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கூட்டத்தொடரின் முதல் நாள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது.


பிரதமர் மோடி உரை:


கூட்டத்தில் நாடாளுமன்ற சாதனைகள், நினைவுகள் மற்றும் அனுபவங்கள் என்ற தலைப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார். முன்னாள் பிரதமர்களின் செயல்பாடு, நாடாளுமன்றத்தின் முக்க்ய நிகழ்வுகளையும் கட்சி பேதமின்றி பாராட்டினார். அதன் முடிவில், அனைவரது ஒத்துழைப்போடு புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு நாம் செல்லும்போது சிறப்பாக பணியாற்றுவோம் என நம்புகிறேன்.  ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளும்போது, இதில் அரசியல் கலக்காமல் இருக்க வேண்டும் எனவும் வலியுறுதினார். ஆனால், பிரதமர் மோடியே தனது உரையில் பல இடத்தில் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடினார். 


அட்டாக் மோடில் பிரதமர் மோடி:



  • நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்கள் நாட்டிற்காக பெரும் பங்காற்றியுள்ளனர் என பாராட்டினார். அதேநேரம், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஓட்டிற்கு பணம் அளிக்கும் ஊழல் நடைபெற்றதையும் குறிப்பிட்டார்

  • வங்கதேசத்திற்கு சுதந்திரம் பெற்று தர வேண்டும் என முடிவெடுத்து அதனை செயல்படுத்தி அந்த வெற்றியை  நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தி அறிவித்ததை பாராட்டினார். அதேநேரம், எமர்ஜென்சியை அறிவித்து ஜனநாயகத்தின் தாய் மீது இந்திரா காந்தி தாக்குதல் நடத்தியதாகவும் பிரதமர் மோடி பேசினார்.

  • வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 3 மாநிலங்கள் பிரிக்கப்பட்டதை அனைவரும் கொண்டாடினார்கள் - ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆந்திர பிரிக்கப்பட்டபோது இரண்டு மாநில மக்களும் அதை கொண்டாட முடியாத மன நிலையில் இருந்தனர் என பிரதமர் மோடி பேசினார்.

  • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தெபோதே உயிரிழந்ததை நினைவு கூர்ந்தார். அதேநேரம், 400 உறுப்பினர்களுடன் ஆட்சியில் இருந்த கட்சி இன்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது என மோடி குறிப்பிட்டார்.

  • அன்று 4 உறுப்பினர்களை கொண்டிருந்த கட்சி 400 உறுப்பினர்களை கொண்டிருந்த கட்சியை வீழ்த்தி தற்போது ஆட்சி செய்து வருகிறது என பிரதமர் மோடி பேசினார். 


அரசியல் கலக்க வேண்டாம் என கூறிய பிரதமர் மோடியே, தனது உரையில் மீண்டும் மீண்டும் காங்கிரசை மறைமுகமாக சாடியது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இன்றைய அவை நடவடிக்கைகளை தொடர்ந்து, நாளை முதல் அடுத்த நான்கு நாட்களும் புதிய நாடாளுமன்றத்தில் தான் அவை நடவடிக்கைகள் நடைபெற உள்ளன.