மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸுக்கு ஆதரவு அளிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு எடுத்துள்ளனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸுக்கு 26 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 


தொடர்ந்து காங்கிரஸின் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸுக்கு ஆதரவு என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 


மழைக்கால கூட்டத்தொடரை ஸ்தம்பிக்க வைத்த மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை பேச வைக்கும் முயற்சியில், பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான்ம் கொண்டு வர இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியின் (இந்தியா) எதிர்க்கட்சிகள் நேற்று முடிவு செய்தன. 


இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 2023 ம் ஆண்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என மோசியே 5 ஆண்டுகளுக்கு முன் கணிந்திருந்தார். 2019 பொதுத் தேர்தலுக்கு முன், 2019 பிப்ரவரி 7ஆம் தேதி மக்களவையில் தனது உரையின் போது இதை குறிப்பிட்டார். தற்போது அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது ஏன்..? 


மணிப்பூர் பிரச்னை தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் வலியுறுத்தி வருகின்றனர். விதி எண் 267இன் கீழ் அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு, மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.


ஆனால், விதி எண் 176இன் கீழ் குறுகிய நேரத்திற்கு மட்டுமே விவாதிக்க முடியும் ஆளும் பாஜக அரசு தெரிவித்து வருகிறது. இதனால், 5வது நாளாக நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது. 


மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போட்ட திட்டம்: 


மணிப்பூர் விவகாரம் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. தீர்மானம் தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும், இன்று நாடாளுமன்றத்தில் 26 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது. 


முன்னதாக, நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன் தினம் தெரிவித்தார்.  அந்த கடிதம் எழுதியுள்ளதாக ட்விட்டரில் தகவல் வெளியிட்ட அமித் ஷா, "மணிப்பூர் பிரச்னையை விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.


கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை நாடுகிறோம். இந்த முக்கியமான பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்" என தெரிவிந்திருந்தார்.