ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டத்தில், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் பெரும் மதக்கலவரமாக மாறியது. மசூதிக்கு தீவைக்கப்பட்டதில் இமாம் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த கலவரத்தில் பல்வேறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.
ஹரியானா மதக்கலவரம்:
இந்த கலவரத்தில் மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். 20 காவல்துறை அதிகாரிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. மணிப்பூரை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் வெடித்த கலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இம்மாதிரியான சூழலில், கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி, பலரின் வீடுகளை மாநகராட்சி இடித்து வருகிறது.
வீடுகளில் இருந்து கொண்டுதான், மத ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கலவரக்காரர்கள் கல் வீச்சை நடத்தியதாக மாவட்ட நிர்வாகம் குற்றஞ்சாட்டி வருகிறது.
இஸ்லாமியர்களை குறிவைத்து மாவட்ட நிர்வாகம் அவர்களின் வீடுகளை, அவருக்கு சொந்தமான கடைகளை இடித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்ககள் புகார் கூறி வருகின்றனர். இது தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம்.
"இன அழிப்பின் ஒரு பகுதியாக வீடுகளை அரசு இடிக்கிறதா?"
அப்போது, கலவரம் நடைபெற்ற நூஹ் மற்றும் குருகிராம் பகுதிகளில் வீடுகளை இடிப்பதற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ் சந்தவாலியா மற்றும் ஹர்பிரீத் கவுர் ஜீவன் அதிரடி தடை விதித்தனர்.
அப்போது, பல அதிரடி கருத்துகளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். "குருகிராம் மற்றும் நூஹ் பகுதிகளில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஹரியானா அரசு கட்டிடங்களை இடித்து வருகிறது. எந்த விதமான உத்தரவும், நோட்டீசும் பிறப்பிக்காமல் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி கட்டிடங்களை இடித்து வருகின்றனர். சட்டத்தின்படி, எந்த விதிகளையும் பின்பற்றவில்லை" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "சட்டம் ஒழுங்கு பிரச்னை என்ற பொய் காரணத்தை சொல்லி, குறிப்பிட்ட சமூகத்தின் வீடுகள் இடிக்கப்படுகிறதா? இன அழிப்பின் ஒரு பகுதியாக அரசு வீடுகளை இடிக்கிறதா? இது போன்ற சூழ்நிலையில் தான், இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த நாட்டின் குடிமக்களைப் பாதுகாக்கிறது என நாங்கள் கருதுகிறோம். அதேபோல, சட்டத்தை பின்பற்றாமல் யாருடைய வீட்டியைும் இடிக்கக் கூடாது" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நூஹ் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் கடந்த இரண்டு வாரங்களில் எத்தனை கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு ஹரியானா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.