புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடிக்கு பதில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மக்களவை செயலகமும், மத்திய அரசும் குடியரசுத் தலைவரை விழாவிற்கு அழைக்காமல் அவரை அவமதித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா:
வழக்கறிஞர் ஜெயா சுகின் தாக்கல் செய்த மனுவில், "பதவியேற்பு விழா தொடர்பாக மக்களவை செயலாளர் விடுத்த அழைப்பிதழுடன், மே 18ம் தேதி வெளியிடப்பட்ட மக்களவை செயலக அறிக்கை, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது.
இந்தியாவின் முதல் குடிமகனாகவும், நாடாளுமன்ற அமைப்பின் தலைவராகவும் குடியரசுத் தலைவரின் பங்கை வலியுறுத்தி, உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கை ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் கொண்ட விடுமுறை கால அமர்வு விசாரித்தது.
குடியரசு தலைவர் அவமதிப்பா?
முன்னதாக, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டது. அதில், "குடியரசு தலைவர் முர்முவை முற்றிலுமாக புறக்கணித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு நமது ஜனநாயகத்தின் மீதான பாரதூரமான அவமானம் மட்டுமன்றி நேரடியான தாக்குதலும் ஆகும்.
இந்த கண்ணியமற்ற செயல் குடியரசு தலைவர் உயர் பதவியை அவமதித்து, அரசியலமைப்பின் மதிப்பையும் மீறுகிறது. முதல் பெண் பழங்குடியின குடியரசு தலைவரை தேசம் கண்டுள்ள நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய மனநிலையை இது சீரழிக்கிறது.
பாஜக விமர்சனம்:
நாடாளுமன்றத்தை இடையறாது குழிதோண்டிப் புதைத்த பிரதமருக்கு ஜனநாயக விரோதச் செயல்கள் புதிதல்ல. இந்திய மக்களின் பிரச்னைகளை எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டு, முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்" என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் முடிவு, ஜனநாயக நெறிமுறைகளின் மீதான தாக்குதல் என பாஜக விமர்சித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் முடிவை கடுமையாக சாடியுள்ள பிரதமர் மோடி, சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தன்னை பார்ப்பதற்காக 20,000க்கும் மேற்பட்டோர் குவிந்ததை குறிப்பிட்டு பேசினார்.
"ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மாத்திரமன்றி, நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தமது தேசத்தின் நலனுக்காக நிகழ்ச்சியில் ஒன்றிணைந்தனர். அந்த விழாவில் முன்னாள் பிரதமரும் கலந்து கொண்டார். எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்" என்றார்.