வேலைவாய்ப்பின்மை, கடன்தொல்லை மற்றும் திவால் காரணமாக 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 25,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்தும், இளம் வயதினர் இடையே தற்கொலை எண்ணிக்கை குறித்தும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த பதிலில்,
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் படி, வேலைவாய்ப்பின்மை ஏற்படுத்திய மன அழுத்தத்துக்கு ஆளாகி 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 9,140 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதேபோன்று, கடன் தொலை, நொடித்துப் போதல் காரணமாக 16,091 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை காரணமாக 3,548 பேர் தங்களை உயிர்களை மாய்த்துக் கொண்டனர். 2018ல் இந்த எண்ணிக்கை 2,741 ஆகவும், 2019ல் இது 2,851 ஆகவும் உள்ளது.
மனநல குறைபாடுகளை போக்குவதற்காக மனநல ஆரோக்கிய திட்டத்தை கடந்த 1982 முதல் இந்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும், இத்திட்டத்தின்படி இந்தியா முழுவதும் உள்ள 692 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மனநல குறைபாடு, தற்கொலை எண்ணம், பணியிடங்களில் அழுத்தம், வாழ்க்கைக்கு ஏற்ற திறன் மேம்பாடு, ஆலோசனை ஆகியவை மாவட்ட மனநல ஆரோக்கிய திட்டத்தின் கீழ் (District Mental Health Programme) செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர், " முன்னோடியில்லாத அளவில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடிகிறது. இந்த, அசாதரணமான போக்கை சரிசெய்ய மத்திய அரசு சில திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கோடிக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கைகளையும், கனவுகளையும் சீர்குலைக்கும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது. மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் வருமானத்தில் 53% வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். 4.7 கோடி இந்தியர்கள் கடும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயம், முதல் 100 இந்திய செல்வந்தர்களின் சொத்து மதிப்பு ரூ.57 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடுமையாகச் சாடிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இந்த அரசு மக்கள் நலனை முற்றிலும் புறக்கணித்து வருகிறது. நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை. பட்ஜெட் மதிப்பீட்டில் 50%க்கும் மேல் கடன் வாங்கி செலவு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட்டில், வட்டி மட்டும் ரூ.9.7 லட்சம் கோடியாகும். மூலதனச் செலவு இலக்கு ரூ.7 லட்சம் கோடியாக உள்ளது. வெறும், ரூ.3.36 லட்சம் கோடி மட்டுமே வளர்ச்சி செலவீனங்களாக உள்ளன" என்று தெரிவித்தார்.