பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர், குற்றம் சாட்டப்பட்டவருடன் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒரு ஒப்பந்தத்தின் மூலம் குழந்தையின் கண்ணியத்தை சமரசம் செய்ய பெற்றோர்களை அனுமதிக்க முடியாது என்று நீதிபதி பங்கஜ் ஜெயின் தலைமையிலான அமர்வு 2022 மே 11 அன்று தெரிவித்துள்ளது.குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஒன்றை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரித்த அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டு ஹரியானாவின் சிர்சாவில் உள்ள டப்வாலி மகளிர் காவல் நிலையத்தில் ஐபிசியின் 452, 506, போக்சோ மற்றும் பட்டியல் சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒரு குற்றத்துக்காக முதல் தகவல் அறிக்கை ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தற்போது, போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சமரசத்தின் அடிப்படையில் ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
"குற்றத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது அவரது பெற்றோரால் முன்னெடுக்கப்பட்ட சமரசம் குழந்தையின் கண்ணியத்தையே பாதித்து இந்த சட்டத்தின் சாராம்சத்தையே தோற்கடிக்கும் நிலைக்குத் தள்ள முடியாது” என நீதிமன்றம் கூறியுள்ளது.
" குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 482ன் கீழ் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருந்தாலும் ஒரு சர்வதேச அளவிலான மரபினை எதிர்த்து இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது” எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி ஆறு மாத காலத்திற்குள் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"தற்போதைய வழக்கில் குழந்தை (பெரும்பான்மையான வயது வரை) குற்றவாளிகளுடன் தானே முன்னெடுக்கும் எந்த ஒப்பந்தமும்/சமரசமும் செல்லுபடியாகாது, எனவே இந்த மனு செல்லுபடியாகாது" என்று நீதிமன்றம் கூறியது. மேலும், "ஒரு ஒப்பந்தத்தின் மூலம் ஒரு குழந்தையின் கண்ணியத்தை சமரசம் செய்ய பெற்றோர்களை அனுமதிக்க முடியாது" என்று நீதிபதி ஜெயின் வலியுறுத்தியுள்ளார். "சட்டமானது, குழந்தைகளின் இளமைப் பருவம் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருப்பதற்கும், அவர்களின் குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் சுரண்டலுக்கு எதிராக பாதுகாக்கப்படுவதற்கும் அரசு தனது கொள்கையை வழிநடத்தும் கடமையை அங்கீகரிக்கிறது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை மேலும் அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலில் இருந்து குழந்தையைப் பாதுகாப்பதற்கான உரிமையை அமல்படுத்துவதே சட்டத்தின் மையப்பொருள் எனக் குறிப்பிட்டுள்ளது.