ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் தனது இருப்பை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாக குகூள் நிறுவனம் மீது இந்திய போட்டி ஆணையம் கடந்த 2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் அபராதம் விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLAT) குகூள் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த NCLAT, "மொத்த அபராத தொகையான 1,337.76 ரூபாயில் 10 சதவிகிதத்தை செலுத்தும்படி" குகூள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
வழக்கை விசாரித்த அமர்வில் நீதித்துறை உறுப்பினராக நீதிபதி ராகேஷ் குமாரும் தொழில்துறை சார்ந்த உறுப்பினராக டாக்டர். அலோக் ஸ்ரீவஸ்தவாவும் இடம்பெற்றிருந்தனர். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மறுத்த தீர்ப்பாயம், இது தொடர்பான மனு பிப்ரவரி 13ஆம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
"இடைக்கால நடவடிக்கையாக மேல்முறையீட்டாளர் அபராதத் தொகையில் 10% NCLAT பதிவாளரிடம் டெபாசிட் செய்ய வேண்டும். சிசிஐ உத்தரவுக்கு தடை கோரி இடைக்கால நிவாரணம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பிப்ரவரி 13ஆம் தேதி விசாரிக்கப்படும்" என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குகூள் நிறுவனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "கடந்த 2018ஆம் ஆண்டு, ஐரோப்பிய ஆணையம் பிறப்பித்த உத்தரவின் நகல் உத்தரவாக இந்திய போட்டி ஆணையம் பிறப்பித்தது" என வாதம் முன்வைத்தார்.
ஆண்ட்ராய்டு மொபைல் போன் உற்பத்தியாளர்கள் மீது சட்ட விரோத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்காக கூறி, குகூள் நிறுவனம் மீது 4.1 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.
இதை மேற்கோள் காட்டி பேசிய சிங்வி, "ஐரோப்பிய ஆணையத்தின் நகல் உத்தரவாக இந்திய போட்டி ஆணையம் பிறப்பித்தது. இந்த உத்தரவின் காரணமாக 2005ஆம் ஆண்டு முதல் கடந்த 17ஆண்டுகளாக அமலில் இருந்த நிலை மாற்றியுள்ளனர்" என்றார்.
இந்த வாதத்தை கேட்ட தீர்ப்பாயம், "கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளதால் இடைக்கால உத்தரவை நிறைவேற்ற அவசரம் இல்லை. இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே, விஷயத்தைப் புரிந்துகொண்டு ஆவணங்களை ஆராய வேண்டும்.
அரை மணி நேர விசாரணைக்கு பிறகு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்" என கூறியது.
இதையடுத்து, வழக்கின் விசாரணை பிப்ரவரி 13ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.