நிலாவின் தென்துருவத்தை ஆராயும் வகையில் சந்திரயான் 3 விண்கலம், கடந்த மாதம் 14-ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்டது. 40 நாட்கள் பயண திட்டத்தின்படி நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட உள்ளது.
சரித்திரம் படைக்குமா இந்தியா?
இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் மிக முக்கிய கட்டமான இந்த தரையிறக்குதல் நிகழ்வானது, மொத்தம் 8 கட்டடங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக தற்போதுள்ள 25 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து வெறும் 15 நிமிடங்களில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.
தற்போதைய சூழலில் நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்த நிகழ்வு, விஞ்ஞான உலகில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் உயர்த்த உள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்குவதற்காக கோடிக்கணக்கான இந்தியர்கள் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், பாகிஸ்தான் பெண், ஒரு படி மேலே சென்று விரதம் இருந்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சந்திரயான் வெற்றிக்காக விரதம் இருக்கும் பாகிஸ்தான் பெண்:
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர். 22 வயதான இவருக்கும் இந்தியாவை சேர்ந்த சச்சின் மீனாவுக்கும் PUBG ஆன்லைன் கேம் விளையாடும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர்.
மே 13 அன்று பாகிஸ்தான் வழியாக ஒரு பேருந்தில் தனது நான்கு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததால் கைது செய்யப்பட்டார். இருப்பினும், ஜூலை 7ஆம் தேதி உள்ளூர் நீதிமன்றத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சீமா ஹைதர், சச்சின் மீனா இப்போது டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சந்திரயான் 3 வெற்றிக்காக விரதம் இருந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சீமா ஹைதர். சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவில், சந்திரயான் 3 வெற்றிக்காக தான் விரதம் இருந்து வருவதாகவும் சந்திரனின் மேற்பரப்பில் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கும் வரை விரதத்தை தொடர்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்து தெய்வங்களின் சிலைகளுக்கு முன்பாக கைகளை ஏந்தி கும்பிடும் சீமா, "இந்த திட்டத்திற்காக நமது பிரதமர் கடுமையாக உழைத்துள்ளார். சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்குவது இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தும்.
இந்த சாதனை இந்தியாவின் எதிர்காலத்திற்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. சந்திரயான் 3-இன் வெற்றிக்காக நான் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ராதே கிருஷ்ணா, ஸ்ரீ ராமர் போன்ற கடவுள்களிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்" என்றார்.