பாகிஸ்தானில் நிகழும் அரசியல் மாற்றங்கள், இந்தியாவில் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அண்டை நாடு என்பதாலும் வரலாற்று ரீதியாகவும் முக்கியமான நாடு என்பதால், அங்கு நிகழும் அரசியல் மாற்றங்களுக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் தரும்.
அந்த வகையில், வரும் ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சமிக்ஞைகள் தெரிகிறது. 


பாகிஸ்தானில் தேர்தல் எப்போது?


இதுகுறித்த அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ளார். அதன்படி, நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்தவுடன் ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தை காபந்து அரசாங்கத்திடம் ஒப்படைப்பேன் என ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதே தகவலை அவர் நேற்றும் பகிர்ந்திருந்தார்.


பாகிஸ்தானில் நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முடிவடைகிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி, பாகிஸ்தான் நாடாளுமன்றம் (NA) சாதாரணமாக கலைக்கப்படுமா அல்லது முன்கூட்டியே கலைக்க அதிபருக்கு அவர் பரிந்துரை வழங்குவாரா என்பதை ஷெரீஃப் தெளிவுபடுத்தவில்லை.


இதுபற்றி விரிவாக பேசிய அவர், "கடந்த ஆண்டு ஏப்ரலில் நாட்டை வழிநடத்தும் புனிதமான பொறுப்பு, நாட்டின் நலனுக்காக உழைக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. தற்போதுள்ள அரசாங்கம், அதன் குறுகிய பதவிக்காலத்தில், அதாவது 15 மாதங்களில், அழிவின் இடிபாடுகளை சுத்தம் செய்தது. இம்ரான் கான் அரசால் இந்த இடிபாடுகள் உருவாக்கப்பட்டன.


கடந்த சில மாதங்களில் எனது அரசாங்கம் நாட்டை காக்க அரசியலை தியாகம் செய்தது. தேர்தலுக்குப் பிறகு அடுத்த அரசாங்கத்தை யார் அமைத்தாலும், அவர்களின் முதன்மையான முன்னுரிமை கல்வியாக இருக்க வேண்டும். கல்வியால் மட்டுமே நம் நாட்டை சிறப்பாக மாற்ற முடியும்" என்றார்.


பாகிஸ்தான் அரசியல் சூழல்:


பாகிஸ்தானில் அடுத்த தேர்தலுக்கான தேதியை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (ECP) அக்டோபர் அல்லது நவம்பரில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், தேர்தலை நடத்த வேண்டும் என இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி வலியுறுத்தி வருகிறது. வரும் தேர்தலில், அக்கட்சி வெற்றி பெறும் என அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.  


நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் கட்சிக்கு எதிராக பெரும்பான்மை எம்பிக்கள் வாக்களித்தனர். இதனால், பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலக நேர்ந்தது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த ஒரே பிரதமர் இம்ரான் கான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். 


இதை தொடர்ந்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தற்போதைய தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், பிரதமராக பதவியேற்றார்.