சந்திரயான் 3 மூலம் விண்வெளி வியாபாரமே மாறப்போகிறது என இஸ்ரோ முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


சந்திரயான் 3 விண்கலம்:


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சுமார் ரூ.615 கோடி செலவில் சந்திரயான் 3 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. உலக நாடுகளே உற்று நோக்கும் இந்த விண்கலம், இன்று பிற்பகல் 2.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என, இஸ்ரோ முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கேம் சேஞ்சர் - நம்பி நாராயணன்:


சந்திரயான் 3 விண்கலம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “சந்திரயான் 3 விண்கலம் கண்டிப்பாக இந்தியாவிற்கான ஒரு கேம் சேஞ்சராக இருக்கும். இது வெற்றிகரமாக நடைபெறும் என நம்புகிறேன். இதன் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு உந்துசக்தியாக மாறும். விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட வேண்டும் என நம்பிக்கையுடன் கடவுளை பிரார்த்திப்போம். சந்திரயான் 2-ல் கிடைத்த தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுள்ளோம்.


பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளன:


தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால், கடந்த முறை இந்தியாவின் ரோவர் கருவியை வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை. ஆனால், தற்போது அந்த பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த முறை ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு, நிலவில் தடம் பதித்த அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டிட்யலில் இந்தியா இணையும் என நம்புகிறேன். ஒட்டுமொத்த நாடும் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட வேண்டும் என எதிர்பார்த்து இருப்பதை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. 


வியாபாரம் பெருகும்:


சந்திரயான் 3 வெற்றி பெறும்பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் விண்வெளித் துறையில் வளர்ச்சி கிடைக்கும் என்பதோடு, 600 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 50 லட்சம் கோடி மதிப்பிலான விண்வெளி தொழிலில் தற்போது 2 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே பங்களித்து வரும் இந்தியாவின் நிலை மேம்படும். விண்வெளி ஆராய்ச்சி துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும், மத்திய அரசின் முயற்சிகள் பாராட்டத்தக்கது.


”வெளிநாட்டு நிறுவனங்களும் களமிறங்கும்”


மத்திய அரசின் நடவடிக்கையால் பல்வேறு ஸ்டார்-அப் நிறுவனங்கள் இந்த துறையில் உருவாகலாம். இதில் அதிகப்படியான முதலீடுகள் ஏற்படலாம். வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் விண்வெளி ஆராய்சிக்காக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடரலாம் அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து முதலீடு செய்யலாம். ஒரு நாடு வாழ்வதற்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் அவசியம். மிகப்பெரிய விண்வெளி திட்டங்களை முன்னெடுக்க, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் போன்று, சீனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் என்ற ஒன்றை உருவாக்க வேண்டும்” என நம்பி நாராயணன் தெரிவித்துள்ளர்.