இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவல் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.46 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் 2624 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளனர். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தீவிரம் அடைந்துள்ளது. 


இந்நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மிகவும் பயங்கரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவுடன் நாங்கள் துணை நிற்போம். அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். மேலும் இந்தப் பிரச்னையை நாம் அனைவரும் மனித நேயத்துடன் எதிர்கொள்ள வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். 






இம்ரான் கானின் இந்த பதிவு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ட்விட்டர் பக்கத்தில் ‘#PakistanstandswithIndia’ என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதில் பாகிஸ்தான் மக்கள் சிலர் தங்களின் பிரார்த்தனை மற்றும் நலம்பெற வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வந்தாலும் இரு நாட்டு மக்களின் நல்லுறவுக்கு இந்தப் பதிவுகள் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.