குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் சிஏஏ ஆதாரவாளர்கள் போராட்டம் நடத்தியதற்கு, ”பாகிஸ்தானியர்களுக்கு பாதுகாப்பு; விவசாயிகளுக்கு துப்பாக்கிச்சூடா என கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார். 


குடியுரிமை திருத்த சட்டம் 2019:


மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதையடுத்து, இச்சட்ட திருத்திற்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன.


குடியுரிமை திருத்த சட்டமானது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர்களான இந்து, சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது. இச்சட்டமானது, சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதையடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல மாநில தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்:


இச்சட்டம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த கெஜ்ரிவால்,  குடியுரிமை திருத்த சட்டமானது, நாட்டை பாதுகாப்பற்றதாகவும் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலையை சீர்குலைக்கும் சூழ்நிலையை உருவாக்கும். மற்ற  நாடுகளில் இருந்து  வரும் சிறுபான்மையினருக்கு, இந்திய நாட்டின் குடிமக்கள் செலுத்துவோர் வரி பணத்தை செலவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.


மேலும் பாகிஸ்தானியர்களை எங்களது வீடுகளில் குடியேற மத்திய அரசாங்கம் விரும்புகிறது என்றும், எங்கள் குடும்பங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டிய இந்திய அரசின் பணமானது, பாகிஸ்தானியர்களின் குடியேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.


பாகிஸ்தான் குடியேறிகள் போராட்டம்:


இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வெளியேறிய இந்துக்கள், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






இப்போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த கெஜ்ரிவால், ஏபிபி வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் தெரிவித்ததாவது,  பாகிஸ்தானியர்களுக்கு காவல்துறையினுடைய பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன், எனது வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நம் நாட்டின் விவசாயிகள் டெல்லிக்கு வருவதற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை, இந்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள், தடிகள் மற்றும் துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.