நிர்மலா சீதாராமன் ஆலோசனை:
ஒவ்வொரு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாகவும், அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறை பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்களுடன், நிதியமைச்சர் கலந்து ஆலோசித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெறுவது வழக்கம். அதன்படி, 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காணொலி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இதில் உட்கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர். இதேபோன்று வரும் 28ம் தேதி வரையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டங்களில், பல்வேறு துறைகளை சார்ந்த நபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதில், எந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, எவ்வளவு நிதி ஒதுக்குவது, சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய துறைகள் எவை, என்ற பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்திய தொழிற்கூட்டமைப்பு கோரிக்கை:
அடுத்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்திய தொழிற்கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கை மற்றும் பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில், தனிநபர் வருமான வரி விகிதம் மற்றும் மூலதன ஆதாய வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்வது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பை தடுப்பதற்கான போதுமான தண்டனை விதிகள் ஏற்கனவே இருப்பதால், சரக்கு மற்றும் சேவை வரியை குற்றமற்றதாக மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வணிகங்களுக்கான வரி உறுதியானது என்பதால் தொடர வேண்டும் எனவும், கார்ப்பரேட் வரி விகிதங்களை தற்போதைய நிலையிலேயே பராமரிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வணிகத்தில் குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, கைது அல்லது காவலில் வைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளது.
மானியங்களை குறைக்க பரிந்துரை:
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவிகிதம், தேவையில்லாத மானியங்கள் மூலம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில். 1.6% அளவிற்கான மத்திய அரசு சார்பில் இருந்தும், 4.1% மாநில அரசுகளிடம் இருந்தும் தொடர்வதாகவும், எரிபொருள் மற்றும் உரங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை பரிசீலித்து பார்ப்பதன் மூலம், அரசுக்கான தேவையற்ற செலவினங்களை குறைக்க முடியும் எனவும், இந்திய தொழிற்கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.