காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் திடீரென பட்டப்பகலில் உள்ளே புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 25 குடிமக்களும், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 26 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பாகிஸ்தானுக்கு பதிலடி:
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பின்னணியில் இருப்பதாக இந்தியா கருதியது. பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்தியா எப்போது பதில் தாக்குதலை நடத்தும் என்றே அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த சூழலில் இந்தியா நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.
வான் எல்லையை மூடிய பாகிஸ்தான்:
பகவல்பூர், முசபராஃபாத் உள்ளிட்ட 9 இடங்களில் இந்தியா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா மேற்கொண்டுள்ள இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் பீதிக்கு ஆளாகியுள்ளது. இந்தியா நடத்திய தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் தங்களது வான் எல்லையை மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லாகூருக்கும், இஸ்லாமாபாத்திற்குள், பைசலாபாத்திற்கும், சில்கோட்டிற்கு செல்லும் விமானங்கள் தற்போது திருப்பிவிடப்பட்டுள்ளது. பல இடங்களில் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகிறது. லாகூர் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பயணி ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்:
அடுத்த 48 மணி நேரத்திற்கு பாகிஸ்தான் தன்னுடைய வான் எல்லையை தற்காலிகமாக மூடியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பிறகு வானில் பறந்து கொண்டிருந்த ஏராளமான விமானங்கள் அருகில் இருந்த விமான நிலையங்களில் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு கடும் கொந்தளிப்புடன் காணப்பட்ட இந்திய அரசு நாடு முழுவதும் இன்று போர் பதற்ற ஒத்திகைக்கு தயாராகிய நிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் நடத்திய தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தியா இன்று நடத்திய ஆபரேசன் சிந்தூர் குறித்து விரிவான விளக்கத்தை மத்திய அரசு இன்று அளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.