பத்மஸ்ரீ என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்குப் பதக்கமும் பாராட்டிதழும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மருத்துவர் ரவி கண்ணன் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
ரவி கண்ணன் அஸ்ஸாம் மக்களுக்கு ஆபத்பாந்தவன். அஸ்ஸாமைச் சேர்ந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தெற்கு அஸ்ஸாமின் கச்சார் கேன்சர் மருத்துவமனையில் பணிபுரிகிறார். குறிப்பாக சில்சார் மாவட்டத்தின் பராக் வேலி மக்களிடம் கேட்டால் அவர்கள் கண்ணன் சார் தான் எங்களின் தெய்வம் என்பார்கள். அந்த அளவுக்கு அவர் அம்மக்களின் மனதில் இடம் பெற்றிருக்கிறார்.
ஆரம்பத்தில் அடையார் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் தான் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு அவர் அஸ்ஸாம் மாநிலத்தின் கச்சார் கேன்சர் மருத்துவமனையில் இணைந்தார். அவர் மீது மக்கள் கொண்ட அபிமானமும், மரியாதையும் தான் இப்போது திரும்பி அவர் கைகளில் விருதாக வந்துள்ளது. ஆனால் தான் பெற்ற விருதை கொண்டாடி பெருமை பேசவில்லை மருத்துவர் ரவி கண்ணன்.
மாறாக அவர் கூறியது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. "இது எனக்கான விருது இல்லை. நான் பணிபுரியும் மருத்துவமனையின் சக்கரத்தில் நான் ஒரு சிறிய பல். அந்த மருத்துவமனையில் நிறைய பேர் ஊக்க சக்தியாக இருக்கிறார்கள்" என்றார். நிறைகுடம் நீர் தழும்பாது என்பது இதுதான் போல.
மேலும் அவர் பேசுகையில், "கச்சார் கேன்சர் மருத்துவமனை, நாளுக்கு நாள் பெரும் அடையாளம் பெற்று வருகிறது. இந்த மருத்துவமனையின் சேவை விரிவடைய உதவிவரும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் நிச்சயமாக அதனைக் குணப்படுத்த முடியும்" என்று கூறினார்.
சென்னையில் கல்வி; வேலை:
சென்னை கீழ்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்ற இவர் தன்னுடைய முதுநிலை பட்டத்தை புது தில்லியிலுள்ள மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பெற்றார்.
கண்ணன் சென்னை அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறைக்கு தலைமை தாங்கினார். 2006 ஆம் ஆண்டு ஒரு சக ஊழியரின் வேண்டுகோளின் பேரில் கலந்தாலோசிப்பதற்காக இவர் முதன்முறையாக கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டார். அப்போது அந்நிறுவனத்தின் அப்போதைய இயக்குநரைச் சந்தித்து உரையாடியபோது கச்சார் மையத்திற்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்ணன் தனது பயிற்சியை சென்னையில் விட்டுவிட்டு 2007 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் அசாம் மாநிலத்திற்குச் சென்றார், பராக் பள்ளத்தாக்கு மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவதற்காக சில்சாரில் உள்ள கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் மருத்துவச் சேவையை தொடர்ந்தார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டில் மருத்துவத்திற்காக வழங்கப்படும் மகாவீர் விருது பெற்றார். இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கைகளால் 2020 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்