உத்திரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி அறிவித்துள்ளார். 
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி அதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜும் கூட்டணி வைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மாயாவதி இவ்வாறு அறிவித்துள்ளார். 2017ம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜூம் கருத்து வேறுபாடால் தேர்தலைத் தனித்தனியே சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த முடிவு குறித்துக் கூறியுள்ள மாயாவதி, சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் தாங்கள் கூட்டணி வைப்பதாக இல்லை என்றும் மக்களுடனான கூட்டணியை மட்டுமே நம்பித் தேர்தலில் களமிறங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் உத்திரப்பிரதேசத்தில் மும்முரமாகத் தேர்தல் பணியில் இறங்கியுள்ளது. 


லக்கிம்பூரில் விவசாயிகளுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவம் உட்பட பல வன்முறைகள் அதித்யநாத் அரசின் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் என அண்மையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும் தெரிவித்திருந்தார். அங்கு பாஜகவின் ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள், இளைஞர்கள், பட்டியலின மக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாஜக அரசு மீது அதிருப்தியில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் யோகி ஆதித்யநாத் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வது கடினம் என அவர் தெரிவித்துள்ளார். 







சில வாரங்களுக்கு முன்பு  லக்கிம்பூர் விவசாயிகளின் குடும்பங்களைக் காணச்சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த சம்பவத்தையடுத்து யோகி ஆதித்யநாத் ஒரு கோழை என குறிப்பிட்டார் பாகெல். பாஜக மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பதாக குற்றம்சாட்டினார். பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து பாஜக அதைக் கற்றுக்கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.



403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக 2017ம் ஆண்டு தேர்தலின்போது பாஜக 309 தொகுதிகளை வென்றது. அப்போது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 18 இடங்களையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி 49 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 7 இடங்களையும் வென்றன.