டெல்லியில் ஆக்சிஜென் சிலிண்டர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகிவருகிறது. மகாராஷ்ட்ரா, டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் தொற்றின் தாக்கம் தீவிரமாகி வருகிறது. மகாராஷ்ட்ராவில் தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லிக்கு ஆக்சிஜென் சப்ளை இயல்பை விட மிக குறைவான அளவிலேயே உள்ளதாகவும். டெல்லிக்கு என்று ஒதுக்கப்பட்ட சிலிண்டர்கள் பிற மாநிலங்களுக்கு செல்வதாகவும் அவர் கூறினார். டெல்லியில் தற்போது ஆக்சிஜென் என்பது அத்தியாவசியமாக மாறிவிட்டது என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார். இன்று காமன்வெல்த் விளையாட்டு கிராமம், யமுனா விளையாட்டு வளாகம் மற்றும்ரூஸ் அவென்யூவில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட்ட முதல்வர் அங்கு 1500 ஆக்சிஜென் வசதிகொண்ட படுக்கைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அமைக்கப்படும் என்று கூறினார்.
மேலும் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் 6000 படுக்கைகளை அதிகரிக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. நவம்பர் மாதம் மத்திய அரசு 4 ஆயிரம் படுக்கைகளை வழங்குவதாக கூறியது. ஆனால், இதுவரை 1,800 படுக்கைகளை மட்டுமே வழங்கியுள்ளது என்றும் கூறினார். மேலும் டெல்லியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்குவதில் 2 முதல் 3 நாட்கள் வரை தாமதமாக வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது. 24 மணிநேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.