இணையத்தில் மனிதர்கள் பிரயத்தனப்பட்டு ட்ரெண்டிங் வீடியோக்களை பதிவு செய்து லைக்ஸ் அள்ள முயற்சித்தாலும் இவர்களை புறம்தள்ளி சமீபகாலமான செல்லப் பிராணிகளின் வீடியோக்களும் அவற்றின் பிரத்யேக பக்கங்கள் அசால்ட்டாக ஃபாலோயர்களைக் குவித்து வருகின்றன.
செல்லப்பிராணிகளின் ஓனர்கள் அவற்றின் அன்றாட நடவடிக்கைகளை தினசரி பகிர்ந்து இணையத்தில் உலவும் பறவை, விலங்குப் பிரியர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
ஆனால் இங்கு ஒரு ஓனர் பகிர்ந்த வீடியோ இணையவாசிக்களை கோபத்துக்கு ஆளாக்கி கடும் விமர்சனங்களைக் குவித்து வருகிறது.
தீரஜ் சாப்ரா எனும் இந்நபர் தன் செல்ல நாயான ஓரியோவின் வீடியோவை அன்றாடம் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதன்படி முன்னதாக தன் மனைவி மற்றும் செல்ல நாயான ஓரியோவுடன் வாக்கிங் சென்ற தீரஜ், தெருவோரக் கடை ஒன்றில் சாட் உணவு சாப்பிட ஆசைப்பட்டு நிறுத்தி, தன் நாய்க்கும் பானிபூர் வாங்கிக் கொடுத்துள்ளார். அத்துடன் வழக்கம்போல் வீடியோ பகிர்ந்த நிலையில், முதலில் க்யூட் என செல்லம் கொண்டாடத் தொடங்கி, சிறிது நேரத்தில் வறுத்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நாய்களுக்கென இருக்கும் நாய் உணவைத் தவிர்த்து மனிதர்கள் உண்ணும் பிற உணவை அவற்றுக்கு அளிப்பதால் முடி கொட்டுவது உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகள் அவற்றுக்கு ஏற்படக்கூடும்.
தெருவோரக் கடையில் பானிபூரி சாப்பிடுவது மனிதர்களுக்கே ஆரோக்கியக் கேடு என்று கூறப்படும் நிலையில், எவ்வாறு செல்லப் பிராணிக்கு அதனைக் கொடுக்கலாம், படித்த முட்டாள்கள் என நெட்டிசன்கள் இவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.
தீரஜின் இந்த வீடியோ மற்றொருபுறம் இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரத்துக்கும் மேல் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.