உத்தரபிரதேச மாநில ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஷௌகத் அலி ஒரு நிகழ்ச்சியில் உணர்வுகளை தூண்டும் விதமாக பேசியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு திருமணத்தை செய்து கொண்டு பலருடன் திருமண மீறிய உறவில் ஈடுப்பட்டு குழந்தைகளை பெற்று கொள்பவர்கள்தான் இஸ்லாமியர்களை அச்சுறுத்துகிறார்கள் என அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


சம்பாலில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்த கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அசாதுதீன் ஓவைசி கட்சியை சேர்ந்த ஷௌகத் அலி பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


 






"இஸ்லாமியர்கள் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் இருவரையும் அவர் மதிக்கத்தான் செய்வார். ஆனால், நீங்கள் ஒரு முறை திருமணம் செய்து கொண்டு மூன்று மனைவிகளை வைத்து கொள்கிறீர்கள். பாஜக, களத்தை இழக்க தொடங்கும்போது அவர்கள் முஸ்லீம்களை குறி வைக்கின்றனர்.


முஸ்லிம்களுக்கு குழந்தைகள் அதிகம் என்கிறார்கள். சில நேரங்களில் நாங்கள் இரண்டு முறை திருமணம் செய்து கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆம், நாங்கள் இரண்டு முறை திருமணம் செய்துகொள்கிறோம் என்பது உண்மைதான்.


ஆனால், இரு மனைவிகளுக்கும் மரியாதை கொடுக்கிறோம், ஆனால், நீங்கள் ஒருவரை மணந்து மூன்று பேரை வைத்துக்கொள்கிறீர்கள். இது யாருக்கும் தெரிவதில்லை. அவர்களில் யாருக்கும் நீங்கள் மரியாதை கொடுப்பதில்லை" என்றார்.


முகலாயப் பேரரசர் அக்பர், ராஜபுத்திர இளவரசி ஜோதா பாயை திருமணம் செய்து கொண்டது குறித்து பேசிய அவர், "நாங்கள் (முஸ்லீம்கள்) எங்களுடன் சேர்ந்து உங்கள் மக்களை உயர்த்தினோம். ஆனால் இப்போது நீங்கள் எங்களை அச்சுறுத்துகிறீர்கள்.


முகலாயப் பேரரசர்களுக்கு முன்னால் பணியும் புழுக்களும் பூச்சிக்களும் தற்போது முஸ்லிம்களை அச்சுறுத்துகிறார்கள். எங்களை மிரட்டுகிறீர்கள்? 832 வருடங்களாக கைகளை பின்னால் மடக்கி சலாம் போட்ட உங்களைப் போன்ற புழு பூச்சிகளை ஆண்டவர்கள் நாங்கள். இப்போது எங்களை மிரட்டுகிறீர்கள்.


நம்மை விட மதச்சார்பற்றவர் யார்? அக்பர் ஜோதா பாயை மணந்தார். எங்களுடன் சேர்ந்து உங்கள் மக்களையும் உயர்த்துகிறோம். ஆனால், உங்களுக்கு ஒரு பிரச்சினை. ஒரு இந்து துறவி முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் என்கிறார். ஏன்? நாங்கள் என்ன கேரட், முள்ளங்கி, வெங்காயமா? " என்றார்.


இந்த வீடியோ வைரலானதையடுத்து, தான் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தவரையும் குறிப்பிடவில்லை என ஷெளகத் அலி விளக்கம் அளித்துள்ளார்.