இதுதான் சமூக நீதி! உதவித்தொகை பெற்று வெளிநாட்டில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள்!
பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்காக மத்திய அரசு தேசிய வெளிநாட்டு உதவித்தொகையை வழங்கி வருகிறது. அதன்படி, கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 1037 பட்டியலின வகுப்பு மாணவர்களும், 194 பழங்குடியின மாணவர்களும் பயன் பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் உதவித்தொகை மூலம் வெளிநாட்டில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் விவரத்தை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே இன்று வெளியிட்டுள்ளார்.
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை:
ஒடுக்கப்பட்ட வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் சாதியின் அடிப்படையில் இங்கு பாகுபாடு காட்டப்பட்டது என்பதால், சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கல்வியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களை முன்னேற்றிவிடும் நோக்கில் கல்வி நிலையங்களில் அவர்களுக்கான இடத்தை உறுதி செய்து வருகிறது இடஒதுக்கீடு முறை.
இடஒதுக்கீட்டை தவிர சாதியால் பாதிக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்காக மத்திய அரசு தேசிய வெளிநாட்டு உதவித்தொகையை வழங்கி வருகிறது.
மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்:
அதன்படி, கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 1037 பட்டியலின வகுப்பு மாணவர்களும், 194 பழங்குடியின மாணவர்களும் பயன் பெற்றுள்ளனர். கடந்த 2023-24ஆம் ஆண்டில், 117 பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும், 23 பழங்குடியின மாணவர்களுக்கும் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடுகளில் 263 பட்டியலின வகுப்பு மாணவர்களும், 39 பழங்குடியின மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
பட்டியலின வகுப்பு மற்றும் பழங்குடியின மாணவர்கள், வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்காக குடும்ப வருமான உச்சவரம்பு, கல்வி இடங்களின் எண்ணிக்கை மற்றும் நிதி உதவித் தொகையை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் எடுத்து வருகிறது.
இந்தத் தகவலை மக்களவையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதவாலே எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.