சிறார் மீதான பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க தனிப்பிரிவு அமைக்கப்படும் என கேரள போலீஸ் அறிவித்துள்ளது. கேரளாவில் ஆண்டு ஒன்றுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 30000 வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போலீஸ் தரப்பில் 10000க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் இருப்பதாக கேரள பாரதிய ஜனதா அங்கே அண்மையில் புகார் எழுப்பியிருந்தது. இதற்கிடையேதான் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






கேரளாவில் ஆண்டு ஒன்றுக்கு 30000க்கும் மேற்பட்ட போக்சோ குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. வழக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து காவல்துறை டிஜிபி அதை விசாரிக்க தனிப்பிரிவு அமைப்பதற்கான ஆலோசனை கேட்டு அரசின் கூடுதல் செயலாளரிடம் திட்ட முன்வரைவு கொடுக்கப்பட்டிருந்தது. 






2019ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் நாட்டின் அனைத்து மாநில காவல்துறையிலும் போக்சோ குற்ற வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவு அமைக்கப்படவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது டிஜிபி-யின் யோசனைக்கு கேரள அரசு ஓகே சொல்லியிருக்கிறது. இதையடுத்து இந்தப் பிரிவில் 401 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இதுதவிர கூடுதலாக 478 பொறுப்புகளுக்கும் நியமனத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கொல்லம் மற்றும் கொல்லம் கிராமப்புறம், திரிச்சூர் மற்றும் திரிச்சூர் கிராமப்புறம் ஆகிய பகுதிகளில் இதற்கான தனிப்பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. 


கேரள அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அங்கே தொடர்ச்சியாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.அண்மையில் அங்கே தொடர்ச்சியாக வரதட்சனைக் கொலை குற்றங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அரசு வரதட்சனை குற்றங்களுக்கு எதிராக பல சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.