நாடு முழுவதும் 2021-22 காலகட்டத்தில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் இந்த காலகட்டத்தில் 1.95% சரிந்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகமானது கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE+) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது 2021-22 காலகட்டத்தில் இந்தியாவில் பள்ளிக் கல்வியின் நிலை பற்றிய அறிக்கை. அந்த அறிக்கையில் தான் நாடு முழுவதும் 2021-22 காலகட்டத்தில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுதவிர நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 44.85 சதவீதம் பள்ளிகளில் கணினி வசதி இருக்கிறது என்றும் 34 சதவீதம்பள்ளிகளில் இணைய வசதி இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
2021-22 ல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 14.89 லட்சம். இது 2020-21 காலகட்டத்தில் 15.09 லட்சமாக இருந்தது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம் தனியார் மற்றும் மேனேஜ்மென்ட் பள்ளிகள் பெரிய அளவில் மூடப்பட்டதே என்று அறிக்கை தெரிவிக்கின்றது.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 27 சதவீத பள்ளிகளில் மட்டுமே சிறப்புத் தேவைகள் கொண்டு குழந்தைகளுக்குத் தோதான கழிவறை இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. அதுபோல், 49 சதவீத பள்ளிகளில் மட்டுமே சாய்தளங்கள், கைப்பிடிகள் உள்ளன என்பதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம்:
கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டதாகவும் அதிலும் குறிப்பாக ப்ரீ ப்ரைமரி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிட் தொற்று காரணமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டதாலும் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என்று விளக்கப்பட்டுள்ளது. 2021-22 காலகட்டத்தில் தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளிகளில் சேர்ந்தோரின் எண்ணிக்கை 25.57 கோடி. இது 2020-21 காலகட்டத்தை ஒப்பிடும் போது அதிகம். அப்போது தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளிகளில் சேர்ந்தோரின் எண்ணிக்கை 19.36 கோடியாக மட்டுமே இருந்தது.
ஆசிரியர்கள் எண்ணிக்கை சரிவு:
மத்திய கல்வி அமைச்சக அறிக்கையின்படி ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2021-22ல் 95.07 லட்சம். இதுவே 2020-21 காலகட்டத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை 97.87 லட்சமாக இருந்தது. ஒப்பிட்டுப் பார்த்தால் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2021-22ல் 1.95 சதவீதம் சரிந்துள்ளது. இன்னும் விரிவாகப் பார்த்தால் தொடக்கப் பள்ளி மட்டுமே கற்பிக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கை 2021-22ல் 34.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 2020-21ல் 35.4 சதவீதமாக இருந்தது. உயர்நிலைப் பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2021-22ல் 18.9 சதவீதமாக குறைந்து உள்ளது. இது 2020-21ல் 21.5 சதவீதமாக இருந்தது. 2021-22ல் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களி எண்ணிக்கை சரிவு 0.9 சதவீதமாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.45 சதவீதமாகவும், தனியார் பள்ளிகளில் 2.94 சதவீதமாகவும் இதர பள்ளிகளில் 8.3 சதவீதமாகவும் உள்ளது.
UDISE+ 2021-22 அறிக்கையில் இதுதவிர டிஜிட்டல் லைப்ரரி, நூலகம், சக மாணவர்களுடன் இணைந்து கற்கும் திறன் என நிறைய சுவாரஸ்யப் புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தத் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.