இந்தியாவில் மக்களவைத் தேர்தல் இந்தாண்டு நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியமைத்தது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட 10 லட்சம் வாக்குகள்:
அதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது அல்லது வாக்குகள் எண்ணப்படவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் 5 லட்சத்து 35 ஆயிரத்து 825 வாக்குகள் தபால் வாக்குகளும், 5 லட்சத்து 22 ஆயிரத்து 513 வாக்குகள் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஆகும். இந்த வாக்குகள் என்ன காரணத்திற்காக எண்ணப்படவில்லை அல்லது நிராகரிக்கப்பட்டது என்று இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவிக்கவில்லை.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்களாக 91.19 கோடி இருந்தனர். ஆனால், இந்தாண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 97.97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருந்தனர். வாக்காளர்களின் சதவீதம் 7.43 சதவீதம் அதிகரித்துள்ளது.
டெபாசிட்டை இழந்த 86 சதவீதம் வேட்பாளர்கள்:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உண்மையான வாக்காளர்கள் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வாக்களிக்க வந்த சம்பவமும், புகார்களும் அதிகாரிகளுக்கு வந்துள்ளது. இந்தாண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 51 ஆயிரத்து 16 ஆகும். ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 930 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 40 வாக்குச்சாவடிகளில் மட்டும் சில காரணங்களால் மறு வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தலில் போட்டியிட மொத்தம் 12 ஆயிரத்து 459 வாக்காளர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான வேட்பாளர்களாக 8 ஆயிரத்து 360 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 7 ஆயிரத்து 190 வேட்பாளர்கள் அதாவது 86 சதவீதம் வேட்பாளர்கள் தங்களது டெபாசிட்டை இழந்தனர்.
ஒரு பெண் கூட இல்லை:
2024 மக்களவைத் தேர்தலில் 3 ஆயிரத்து 921 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இந்தாண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 279 பெண் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 43.85 கோடி மகளிர் வாக்காளர்கள் இருந்தனர். இந்தாண்டு 47.63 கோடி மகளிர் வாக்காளர்கள் இருந்தனர். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 65.55 சதவீதத்தில இருந்து 65.78 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முடிவே மாறியிருக்க வாய்ப்பு:
மொத்த வாக்குகளில் 63 சதவீத வாக்குகளை 6 தேசிய கட்சிகள் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி மற்றும் தேசிய மக்கள் கட்சி கைப்பற்றியுள்ளது. அங்கீகாரம் பெற்ற 47 மாநில கட்சிகள், 690 அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன. தேர்தல் ஆணையம் எண்ணாமல் நிராகரித்த 10 லட்சம் வாக்குகள் ஒருவேளை எண்ணப்பட்டிருந்தால் தேர்தலின் முடிவே மாறியிருக்கவும் வாய்ப்பு உண்டு. ஏனென்றால் தற்போது ஆட்சி நடத்தும் பா.ஜ.க., சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவுடன் மட்டுமே ஆட்சி நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.