போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: 


நாட்டில் நடக்கும் பல பிரச்னைகளுக்கு போதை பொருள் பயன்பாடே காரணமாக உள்ளது. உடல் ரீதியாக மட்டும் இன்றி உளவியல் ரீதியாகவும் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதனால், போதை பொருளுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.


அதன் ஒரு பகுதியாக, நாளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2,416 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.44 லட்சம் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் அழிக்கப்பட உள்ளது.


அமித் ஷா முன்னிலையில் நடக்கப்போகும் சம்பவம்:


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் போதைப் பொருட்கள் அழிக்கப்பட உள்ளது. காணொளி காட்சி வாயிலாக அவர்,  இதனை கண்காணிக்க உள்ளார். 'போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்பு' என்ற தலைப்பில் நாளை டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள அமித் ஷா, வீடியோ கான்பரன்சிங் மூலமாக பல்வேறு நகரங்களில் போதைப்பொருள்கள் அழிக்கப்படவிருப்பதை பார்க்க உள்ளார்.


ஹைதராபாத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவால் (என்சிபி) கைப்பற்றப்பட்ட 6,590 கிலோவும், இந்தூர் பிரிவினால் பறிமுதல் செய்யப்பட்ட 822 கிலோவும், ஜம்மு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 356 கிலோவும் நாளை அழிக்கப்படும் போதைபொருள்களில் அடங்கும்.


இதனுடன், பல்வேறு மாநிலங்களின் செயல்பட்டு வரும் போதை பொருள் தடுப்பு பிரிவும் போதைப்பொருட்களை அழிக்க உள்ளது. அசாமில் 1,486 கிலோ போதைப்பொருளும் சண்டிகரில் 229 கிலோவும் கோவாவில் 25 கிலோவும் குஜராத்தில் 4,277 கிலோவும் ஹரியானாவில் 2,458 கிலோவும் ஜம்மு-காஷ்மீரில் 4,069 கிலோவும் மத்திய பிரதேசத்தில் 1,03,884 கிலோவும் மகாராஷ்டிராவில் 159 கிலோ, திரிபுராவில் 1,803 கிலோவும் உத்தரபிரதேசத்தில் 4,049 கிலோவும் அழிக்கப்பட உள்ளது.


"போதைப்பொருள் இல்லாத இந்தியா"


இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க, போதைப்பொருளுக்கு எதிரான கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் 1ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி வரை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அனைத்து பிராந்திய பிரிவுகளும், மாநிலங்களில் இயங்கி வரும் போதைப்பொருள் தடுப்புப் படைகளும் கூட்டாக சுமார் 8,76,554 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 9,580 கோடி ரூபாயாகும். இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 11 மடங்கு அதிகம்.


நாளை அழிக்கப்பட உள்ள போதைப் பொருளையும் சேர்த்து, கடந்த ஒரு வருடத்தில் அழிக்கப்பட்ட மொத்த போதை பொருளின் அளவு சுமார் 10 லட்சம் கிலோவை எட்டும். இந்த மருந்துகளின் மொத்த மதிப்பு சுமார் 12,000 கோடி ரூபாயாகும்.


போதைப்பொருள் இல்லா இந்தியா என்ற பிரதமர் மோடியின் கனவை நனவாக்கும் வகையில், போதைப்பொருள் ஒழிப்புப் பிரச்சாரம் அதே வைராக்கியத்துடன் தீவிரமாகத் தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.