இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சர்வதேச அளவில் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் குவித்த திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர், விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்தது.
ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ஷ்ரியா சரண், ரே ஸ்டீவன்சன் மற்றும் பலர் நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றதோடு விருதுகளையும் குவித்து வருகிறது.
கோல்டன் க்ளோப் விருதை வென்ற நாட்டு நாட்டு பாடல்:
அந்த வகையில் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், சிறந்த பாடல் பிரிவிலும் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் க்ளோப் விருதை வென்றது. மேலும், 2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவின் கீழ் 'நாட்டு நாட்டு' பாடல் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
நாளை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட உள்ளதால், நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்து விடாதா என்ற ஆவலுடன் ஒட்டு மொத்த நாடும் காத்து கொண்டிருக்கிறது.
உச்சக்கட்ட எதிர்பார்ப்பு:
இந்நிலையில், நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அந்த பாடலை இசை அமைத்துள்ள கீரவாணி. விருதுகள் அறிவிப்பதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
அதில், "கடந்த மூன்று மாதங்களில் நாட்டு நாட்டு பாடல் அமெரிக்க விருதை வென்ற ஒவ்வொரு முறையும் இதைப் பற்றி பேசி இருக்கிறோம். இப்போது, ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சில மணி நேரமே இருக்கிறது. தற்போதும் அவ்வாறே உணர்கிறேன். நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாட்டு நாட்டுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. இது மாயை அல்ல.
நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்த கீரவாணி:
ஒரு இசையமைப்பாளராக எனது திறமைகளை நான் அறிவேன். ஒவ்வொரு இசையமைப்பிலும் எவ்வளவு நன்றாக வந்திருக்கிறது எவ்வளவு மோசமாக வந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியும். நான் நாட்டு நாட்டு பாடலில் நன்றாக இசை அமைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
ஆர்ஆர்ஆர் திரைப்பட குழுவுக்காக பிரார்த்தனை செய்யும்படி நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்தியா எங்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.
'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள முதல் இந்தியப் பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.