நாடாளுமன்றத்தில் நாளை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்ளாதது ஏன் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்தும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுப்பது வழக்கமான ஒன்று.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் கூட்டத் தொடர் குறித்து ஆலோசிப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியது, வழக்கம்போல் பிரதமர் வரவில்லை. இது 'அன்பார்லிமென்டரி' இல்லையா?" என பதிவிட்டு உள்ளார்.
கூட்டத்தில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மழைக்கால கூட்டத்தை சுமூகமாக நடத்த, எதிர்க் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார். மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. அட்டவணையின்படி, மொத்தம் 108 மணி நேரத்திற்கு நடைபெற உள்ள மழைக்கால கூட்டத் தொடரில் 18 அமர்வுகள் கூட்டப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜகவின் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், பிரலாத் ஜோஷி, அர்ஜூன் மேக்வால், முரளீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார், சுப்ரியா சுலே, ஜனதா தளம் சார்பில் ராம்நாத் தாக்கூர், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், அகாலிதளம் சார்பில் ஹர்சிம்ரத் கவுர் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கடந்த இரண்டு ஆண்டுகளில் முந்தைய அமர்வுகளைப் போலவே, இந்த அமர்விலும் கரோனா பெருந்தொற்றுக்கான நெறிமுறை பின்பற்றப்படும் என்றார். இதில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்