மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள்:
மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு, இனக்கலவரம் இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்து வந்தாலும் பிரதமர் மோடி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். ஆனால், மக்கள் மத்தியில் மணிப்பூர் சம்பவம் ஏற்படுத்திய தாக்கம், அவரை வாய் திறந்து கண்டிக்க வைத்தது.
இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் அடங்காத நிலையில், மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. குறிப்பாக, பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில், மேலும் இரண்டு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கலவரத்தின்போது, 800 பேர் சேர்ந்து ஒரு இளைஞரை அடித்து கொலை செய்துள்ளனர். கேட்கும்போதே மனதை உலுக்கும் இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
முடங்கிப்போன நாடாளுமன்றம்:
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்றம், இதன் காரணமாக முடங்கி போயுள்ளது. மணிப்பூர் பிரச்னை தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். விதி எண் 267இன் கீழ் அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு, மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.
ஆனால், விதி எண் 176இன் கீழ் குறுகிய நேரத்திற்கு மட்டுமே விவாதிக்க முடியும் ஆளும் பாஜக அரசு தெரிவித்து வருகிறது. இதனால், நான்காவது நாளாக நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது.
மோடிக்கு எதிராக ஸ்கெட்ச் போடும் எதிர்க்கட்சிகள்:
மணிப்பூர் விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. தீர்மானம் தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெரிவித்தார். கடிதம் எழுதியுள்ளதாக ட்விட்டரில் தகவல் வெளியிட்ட அமித் ஷா, "மணிப்பூர் பிரச்னையை விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை நாடுகிறோம். இந்த முக்கியமான பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.