பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம், மாலை 3:30 மணி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.


கூட்டத்தில் நடந்தது என்ன?


அப்போது பேசிய பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,"மத்தியில் ஆட்சியில் உள்ள அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட அனைத்து தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்றார்.


பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "அடுத்தாண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போட்டியிட ஒப்பு கொண்டோம். இந்த பொதுக் கூட்டணியின் வழிமுறைகள் குறித்து இறுதி செய்ய அடுத்த மாதம், சிம்லாவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வர். அந்தந்த மாநிலங்களில் போட்டியிடும் போது எப்படி ஒன்றாக பணியாற்றுவது என்பது குறித்த திட்டம் தீட்ட ஜூலை மாதம் சிம்லாவில் மீண்டும் சந்திப்போம்" என்றார்.


இதையடுத்து பேசிய நிதிஷ் குமார், "தொகுதி பங்கீடு மற்றும் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் சிம்லா கூட்டத்தில் இறுதி செய்யப்படும்" என்றார். "அடுத்த கூட்டம் ஜூலை 10 அல்லது 12 ஆம் தேதி நடைபெறும். இது அனைத்து மாநிலங்களுக்கான வியூகம் குறித்து விவாதிக்கப்படும்" என கார்கே தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, "பாட்னாவில் இருந்து கூட்டத்தை தொடங்குங்கள். அது பொது இயக்கமாக மாறும் என்று நிதிஷ்குமாரிடம் கூறினேன். கடைசியாக டெல்லியில் கூட்டம் நடத்தினோம். ஆனால். அது பலனளிக்கவில்லை. இந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது" என்றார்.


டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த நிதிஷ் குமார், "விமானத்தை சென்று பிடிப்பதற்காக அவர்கள் சென்றுவிட்டனர்"  என்றார்.


ஆம் ஆத்மி தந்த அதிர்ச்சி:


செய்தியாளர் சந்திப்பில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் இருப்பதாக காட்டி கொண்டாலும், ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு மற்ற எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. முன்னதாக, டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிரான தங்களின் நிலைபாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் பாட்னா கூட்டத்தை புறக்கணிப்போம் என ஆம் ஆத்மி தெரிவித்திருந்தது. 


இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்கே, "நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாகவே இதுபோன்ற பிரச்னைகள் குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.


மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அவசர சட்டத்தை காங்கிரஸ் பகிரங்கமாக எதிர்க்கும் வரை எதிர்கால எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க முடியாது என ஆம் ஆத்மி தற்போது அறிவித்துள்ளது.


இந்த கூட்டத்தில், கே. சந்திரசேகரராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்ள மாயாவதிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற போதிலும், தான் இந்த கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் என மாயாவதி கூறியிருந்தார்.


காங்கிரஸ், பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் எனக் கூறி கூட்டத்தை புறக்கணித்துள்ளது பாரத் ராஷ்டிர சமிதி. குடும்ப நிகழ்ச்சி காரணமாக கூட்டத்தில் கவந்து கொள்ளவில்லை என ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.