மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை நீக்கும் நோக்கில் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது இந்தியா கூட்டணி. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக தன்கர் மீது இந்தியா கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ், திமுக, மேற்குவங்கத்தை ஆளும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், டெல்லி, பஞ்சாபை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான நோட்டீஸில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஸ்கெட்ச் போட்ட இந்தியா கூட்டணி:
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், "மாநிலங்களவையை பாகுபாட்டுடன் நடத்தியதற்காக இந்திய கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் மாநிலங்களவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இந்தியக் கூட்டணி கட்சிகளுக்கு இது மிகவும் வேதனையான முடிவு. ஆனால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நலன்களுக்காக அவர்கள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது" என குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறுமா?
மாநிலங்களவை தலைவரை நீக்க வேண்டுமானால் அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானமானது, மாநிலங்களவை, மக்களவை என இரண்டிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு, வாக்கெடுப்புக்கு விடும்போது மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களில் 50 சதவிகிதத்தினர் + ஒரு எம்.பி. ஆதரவு அளிக்க வேண்டும். இதுவே, மக்களவையிலும் பொருந்தும்.
தற்போதுள்ள சூழலில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான எண்ணிக்கை மாநிலங்களவையிலும் சரி மக்களவையிலும் சரி இந்தியா கூட்டணிக்கு இல்லை. இருப்பினும், எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்கள் காரணமாக ஆளும் பாஜக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமளி காரணமாக இரு அவைகளும் முடங்கியுள்ளது.
இதையும் படிக்க: CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு