க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வில் அடுத்த ஆண்டில் இருந்து மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கைக்கு ஏற்ப திருத்தப்பட்ட விதிமுறைகள் வெளியிடப்பட உள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு முதல் இந்த மாற்றங்கள்
இந்தியா முழுவதும் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர Common University Entrance Test (CUET) எனப்படும் பொது நுழைவுத் தேர்வில் சேர வேண்டும். வல்லுநர் குழுவின் அறிக்கைப்படி, 2025ஆம் ஆண்டு முதல் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறும்போது, ’’கடந்த ஆண்டுகளில் இருந்து வரும் பரிந்துரைகளின் அடிப்படையில், க்யூட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு மிகவும் சிறந்த, திறமையான மற்றும் சாதகமான சூழலை வழங்குவதற்கு தேர்வு செயல்முறையை தொடர்ந்து மேம்படுத்துவது அவசியம் என்பதை உணர்ந்தோம். அதன் அடிப்படையில், யுஜிசி CUET- UG மற்றும் CUET- PG தேர்வுகளை நடத்துவது குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
வல்லுநர் குழு அளித்த ஆலோசனைகள்
இந்தக் குழு தேர்வு முறையின் பல்வேறு கூறுகளை குறிப்பாக, அதன் கட்டமைப்பு, மொத்த தாள்களின் எண்ணிக்கை, பாடத்திட்ட அமைப்பு மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகள், பரிந்துரைகளை யுஜிசிக்கு அளித்தது.
அதன் அடிப்படையில் யுஜிசி, திருத்தப்பட்ட வழிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வெளியிட உள்ளது. இது குறித்து, மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களின் பரிந்துரைகளை வழங்கலாம்’’ என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.
க்யூட் தேர்வில் நடந்த குழப்பங்கள்
முதன்முதலாக 2022-ல் நடந்த CUET- UG தேர்வு, தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டது. மேலும், ஒரு பாடத்திற்கான தேர்வுகள் பல ஷிப்டுகளில் நடத்தப்பட்டதன் காரணமாகக, முடிவுகளை அறிவிக்கும் போது மதிப்பெண்களை இயல்பாக்க (நார்மலைசேஷன்) வேண்டி இருந்தது.
அதேபோல 2024 ஆம் ஆண்டு முதல் முறையாக ஹைப்ரிட் முறையில் தேர்வு நடத்தப்பட்டது. எனினும் டெல்லி முழுவதும் தேர்வு நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.