போரினால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்திய மக்களை  மீட்கும் மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 212 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.


போர்க்களமான இஸ்ரேல்


கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியில் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு திடீர் தாக்குதல் நடத்தினர். ஒரே நேரத்தில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசியதால் அந்நாட்டின் பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் பொது பகுதியாக உள்ள காஸாவுக்காக இருநாடுகளும் அடிக்கடி மோதிக்கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியடைய வைத்தது. 


ஹமாஸ் குழு தாக்குதலால் இஸ்ரேல் நாட்டை சார்ந்த அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவ படையும் பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாஸ் குழுவை ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இதனால் பதற்றமான சூழல் அங்கு உருவாகியுள்ளது. அதே சமயம் தங்கள் நாட்டில் இருந்து இஸ்ரேலில் கல்வி மற்றும் இன்ன பிற விஷயங்களுக்காக தங்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் உலக நாடுகள் களமிறங்கியுள்ளது. 


ஆபரேஷன் அஜய் திட்டம் 


அந்த வகையில் மத்திய அரசும், வெளியுறவுத்துறையும் இணைந்து இந்திய மக்களை மீட்கும் முயற்சிக்கு “ஆபரேஷன் அஜய்” என பெயர் வைத்துள்ளது. அந்நாட்டில் 18 ஆயிரம் இந்திய மக்கள் உள்ள நிலையில், பிரதமர் மோடியிடம் போர் நிலவரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த “ஆபரேஷன் அஜய்” திட்டத்தின் கீழ் இந்திய மக்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கியதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். இதற்காக சிறப்பு விமானங்களும் அனுப்பப்பட்டது. 


இதன் மூலம் முதற்கட்டமாக 212 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். டெல்லி விமான நிலையத்துக்கு வருகை தந்த அவர்களை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சராக உள்ள ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “மத்திய அரசு இஸ்ரேலில் சிக்கியுள்ள அனைத்து இந்திய மக்களையும் மீட்கும். அவர்களைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வர பிரதமர் மோடி உறுதியுடன் உள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழுவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.


மேலும் இந்த திட்டத்தை சாத்தியமாக்கியதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகம், ஏர் இந்தியா விமானக் குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார். இதனிடையே இஸ்ரேலில் இருந்து வந்த பயணி ஒருவர் பேசுகையில், “அங்கே நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம் மகத்தான பணியைச் செய்துள்ளது. மத்திய அரசுக்கு நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.