நாட்டில் ஜூன் மாதம் முதல் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  இதற்கு முக்கிய காரணம் பருவமழை தாமதமாக தொடங்கியதும், எதிர்ப்பாராத நேரத்தில் பெய்த மழையும் தான். தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் இறுதி முதல் வெங்காயத்தின் விலையும் படிப்படியாக உயரும் என கிரிசல் மார்க்கெட் தெரிவித்துள்ளது.


சில்லறை வெங்காயத்தின் விலை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து அதிகரித்து ஒரு கிலோ ரூ. 60 - 70 வரை விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நல்ல மழை பெய்தது. மழைக்கால அறுவடை காலம் என்பதால், செப்டம்பர் மாதம் காய்கறிகளின் விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை (பண்டிகை காலங்களில்) இந்த விலையேற்றம் சீராகும் எனவும் கிரிசல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது,  வெங்காயத்தின் விலை தற்போது சீராக இருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் அதிகரிக்கும் எனவும்,  ஆனால் 2020 ஆம் இருந்த விலை ஏற்றம் போல் இந்த ஆண்டு இருக்காது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கினால் இந்த நிலை சீராகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு தொடக்கத்தில் (ஜனவரி முதல் மே மாதம் வரை) வெங்காய விலை குறைவாக இருந்த காரணத்தால் மக்களிடையே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த காலக்கட்டத்தில் மற்ற காயகறிகள் மற்றும் பருப்பு விலைகள் கடுமையாக உயர்ந்தது. மேலும் மழைக்கால வெங்காய அறுவடை என்பது இந்த ஆண்டு சுமார் 29 மில்லியன் டன் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும், இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகம் அதாவது 7% அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பருவமழையை அடிப்படையாக கொண்டு இதில் மாற்றங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து, வெங்காய ஏற்றுமதிக்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை, இது சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2022-23 இல் இந்தியா 2.5 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்தது, இது முந்தைய நிதியாண்டை விட 65% அதிகமாகும். இந்தியா வெங்காயத்தின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது மேலும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவை நாட்டின் வெங்காய உற்பத்தியில் 70% க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன.