நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வழிசெய்யும் வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்படும்.
இந்த மசோதா சட்டமான பிறகு, சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும். எனினும் இதனால் மாநிலங்களில் பிரதிநிதித்துவம் பாழாகும் என்று மாநிலக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
2014 முதல் கூறப்பட்ட வாக்குறுதி
2014 முதல் பாஜக, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முன்மொழிந்து வருகிறது. மக்களவை தேர்தல் அறிக்கையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். இதன்மூலம் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கலாம் என்னும் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடை இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.
கடந்த சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முன்னுரிமையாக உள்ள ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றார். அடிக்கடி நடத்தப்படும் தேர்தல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் பேசியிருந்தார்.
மேலும் தேசிய வளங்கள் சாமானியர்களுக்கு பயன்படுத்தப்படுவதை கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கனவை நனவாக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து இருந்தது. இந்தக் குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான தனது ஆய்வறிக்கையை அண்மையில் சமர்ப்பித்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேர்தல் முறை எப்படி?
முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதை தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது