ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் திட்டம் இந்தியாவிற்கு ஒன்றும் புதியது அல்ல என்பதையே வரலாறு காட்டுகிறது.


ஒரே நாடு ஒரே தேர்தல்:


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தான். வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


பழைய திட்டம்:


மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் இந்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால், இந்த திட்டம் என்பது இந்தியாவிற்கு ஒன்றும் புதியது அல்ல. சுதந்திர இந்தியாவில் நேருவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முதல் தேர்தலில், நாடாளுமன்றத்திற்கும், நாட்டில் உள்ள சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தான் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த பழைய நடைமுறையை தான் பாஜக மீண்டும் செயல்படுத்த முனைகிறது. அவ்வாறு நடந்தால், தென்னாப்ரிக்க, பெல்ஜியம் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளை தொடர்ந்து, மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நான்காவது நாடு எனும் பெருமையை இந்தியா பெறும்.


வரலாறு என்ன?


நாட்டின் முதல் தேர்தல் 1951ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தொடங்கி 1952ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரையில், 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. இதில் மக்களவை மட்டுமின்றி ஒட்டுமொத்த சட்டமன்றங்களுக்குமான வாக்குப்பதிவும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. மொத்தமாகவே 45.7 சதவிகித வக்குகள் மட்டுமே பதிவாகி, 45 சதவிகித வாக்குகளை பெற்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. 1957, 1962 மற்றும் 1967ஆகிய ஆண்டுகளிலும் இதே பாணியில் தான் தேர்தல் நடைபெற்றது. ஆனால், மாநில சட்டமன்றங்களில் அவ்வப்போது நடைபெற்ற ஆட்சிக் கலைப்பு மற்றும் ஆட்சிக் கவிழ்ப்புகள் ஆகியவை ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதை சிக்கலாக்கின. 1970ம் ஆண்டு நாடாளுமன்றமும் முன்கூட்டியே கலைக்கப்பட்டு 1971ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதன் காரணமாக நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறை 1972ம் ஆண்டு முற்றிலுமாக கைவிடப்பட்டது. இதனால், கடந்த 51 ஆண்டுகளாக பெரும்பாலான சட்டமன்ற தேர்தல்கள் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெறுவதே கிடையாது.


பாஜக ஆதரவு ஏன்?


இந்நிலையில் தான் மீண்டும் ”ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் நடைமுறையை மீண்டும் கொண்டு வர பாஜக முயல்கிறது. தனித்தனியாக தேர்தல் நடைபெறுவது நிதிச்சுமையை அதிகரிப்பதாகவும், தேர்தலின் போது மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை எனவும் கூறி வருகிறது. அதேநேரம், இதில் பாஜகவின் அரசியலுக்கான உள்நோக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது. 


அரசியல் என்ன?


அதன்படி, பொதுவாக சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவிற்கு கடும் நெருக்கடியை கொடுப்பது, காங்கிரசை காட்டிலும் மாநில கட்சிகளாக தான் உள்ளன. உதாரணமாக 2019ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. அப்போது மத்தியில் பாஜகவிற்கு ஒடிசா மக்கள் ஆதரவளித்தாலும், மாநிலத்தில் பிஜு ஜனதா தளத்திற்கு தான் ஆதரவளித்தனர். எனவே, ”ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் மூலம் தேசிய பிரச்னைகளை முன்னெடுத்து, பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி தேர்தலை எதிர்கொண்டால் மாநில அளவிலும் பெரும் வெற்றி பெற முடியும் என பாஜக கருதுகிறது. அதேநேரம், நாடாளுமன்ற தேர்தல் தனியாக நடந்தால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்கொள்ளும். இது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையலாம். ஆனால், ஒரே நேரத்தில் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடந்தால், எதிர்க்கட்சிகளே ஒன்றை ஒன்று எதிர்க்க வேண்டிய சூழல் உருவாகும். எனவே, இது எதிர்க்கட்சிகளை பிரித்தாலும் பாஜகவின் ஒரு கொள்கையாகவே பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இடையேயான அந்த மோதலே பாஜகவிற்கு தேவையான வெற்றியை கொடுத்துவிடும் என்றும் அக்கட்சி தலைமை நம்புகிறது.


எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?


1951-972 இலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், ஒரே நேரத்தில் தேர்தல்களை நடைமுறைப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. அதன்படி, ”புதிய சட்டம் அமலுக்கு வருவதன் மூலம் ஏற்கனவே உள்ள சட்டமன்றங்களின் பணிக்காலத்தை தன்னிச்சையாக குறைக்க அல்லது நீட்டிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியை குழிதோண்டிப் புதைத்துவிடும்.  பொதுவாக மாநிலங்களவைத் தேர்தல்களில் பிராந்திய கட்சிகள் பிராந்திய மற்றும் உள்ளூர் பிரச்னைகளில் கவனம் செலுத்தும்.  தேசியக் கட்சிகள் தேசிய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளைக் கையாள்வதை குறிப்பிட்டு தேர்தலை எதிர்கொள்ளும். ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலுக்கு வந்தால், மக்களவை தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் மாநில சட்டமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மாநிலத் தேர்தல்களில் கூட தேசியப் பிரச்னைகளை சார்ந்து வாக்காளர்கள் முடிவெடுக்க நேரிடும்.  இது தேசியக் கட்சிகள் மாநில மற்றும் லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெற வழிவகுக்கும். மாநிலங்களின் வளர்ச்சியை பாதிக்கும்” என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.


தொடரும் பிரச்னை என்ன?


ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள  வேண்டி உள்ளது. பல கட்டடங்களாக தேர்தல் நடத்தப்பட்டாலும் ஒரே நேரத்தில் பெருமளவிலான மனிதவளம் தேவைப்படும். அதிக எண்ணிக்கையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய VVPAT இயந்திரங்கள் தேவைப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான இயந்திரங்களை வாங்க ரூ.9 ஆயிரத்து 284 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இயந்திரங்களை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பது கூடுதல் செலவாக அமைகிறது. இந்த இயந்திரங்களுக்கான சேமிப்பு கிடங்குகளும் கூடுதல் செலவை ஏற்படுத்தும். அதோடு, ஒருவேளை எதிர்பாராத விதமாக பணிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே நாடாளுமன்றமோ அல்லது ஏதேனும் ஒரு சட்டமன்றமோ கலைக்கப்பட்டால், அதற்கான தேர்தல் உடனடியாக நடத்தப்படுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.