2020ம் ஆண்டில் உலகமெங்கும் கேட்கத் தொடங்கிய வார்த்தை கொரோனா. இந்த ஆண்டும் இந்தியாவை விட்டு விலகாமல் இன்னமும் தன் பிடியில் வைத்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு கொரோனாவின் கோரத்தாண்டவம் கடுமையாக உள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவை அலைக்கழித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற பல கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்க வேண்டுமென அரசு வலியுறுத்துகிறது.
இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்றால் ஒரு கொரோனா நோயாளி 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனாவை பரப்புவார் என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைச்சகத்தின் இணை இயக்குநர் லாவ் அகர்வால் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.அதில், ஒரு கொரோனா பாதிக்கப்பட்ட நபர் முறையாக சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் அதாவது 6 அடி இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருந்தால் அவர் ஒருவர் 30 நாட்களில் 406 நபருக்கு கொரோனாவைப் பரப்புவார். அவர் 50% இடைவெளியை கடைபிடித்தால் 406 நபர்கள் 15 நபர்களாக குறையும். அதுவே 75% இடைவெளியை கடைபிடித்தால் 30 நாட்களில் வெறும் 2.5 நபருக்கு மட்டுமே தொற்று பரவும்.
முறையாக தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்தால் தொற்று பரவுதல் முறையாக கட்டுப்படுத்தப்படும். அதேபோல மாஸ்க் அணிவது கட்டாயம். கொரோனா பாதிக்கப்பட்டவர் மாஸ்க் அணியாமல், பாதிக்கப்படாதவர் மாஸ்க் அணிந்திருந்தால் கொரோனா பரவ 30% வாய்ப்பு உண்டு. இருவருமே மாஸ்க் அணிருந்திருந்தால் கொரோனா பரவ 1.5% மட்டுமே வாய்ப்புள்ளது என்றார்.
கொரோனா பரவல் கடுமையாக இருப்பதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டுமென மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டுமென்றும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.