கொத்து கொத்தாய் இந்தியாவில் கொரோனாவிற்கு பிணங்கள் ஒரு பக்கம் விழுந்துக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்தியன் பிரிமீயர் லீக் என்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நாங்கள் நடத்தியே தீருவோம் என்று பிடிவாதமாய் நிற்கிறது பிசிசிஐ.



இப்படி அடம்பிடிப்பதும், யார் அழுது புரண்டாலும் ஆட்டத்தை நடத்தியே தீருவேன் என்று தீர்மானம் போட்டு திமிரி நிற்பதும் பிசிசிஐ-க்கு ஒன்றும் புதிததல்ல. சென்ற வருடம் கொரோனா முதல் அலை வந்து உலகத்தையே புரட்டிப் போட்டபோது, ஒலிம்பிக் போட்டியே ரத்து செய்யப்பட்டது. ஆனால், நமது பிசிசிஐ-யோ அணிகளை ஐக்கிய அமீரகம் அள்ளிச் சென்று ஆட்டம் போட வைத்து அழகு பார்த்தது. 2008-ல் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகளை, தொடர்ந்து 14வது வருடமாக எந்த தடையுமின்றி நடத்தி வரும் பிசிசிஐ, எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், பிரச்னைகள் எழுந்தாலும், எச்சரிக்கைகள் கொடுத்தாலும் எவன் கெட்டா எனக்கென்ன மனோநிலையில், அதனையெல்லாம் அசால்டாக அப்பறம்… என ஓரம் தள்ளி வைத்துவிட்டு, ”செய்வோம்” என்று இன்று வரை தனது ஆட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.


2009 – ல் இந்தியா நாடாளுமன்ற தேர்தலில் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, ”நீங்க என்னமாச்சும் பண்ணிகுங்க, நாங்க தென்னாப்பிரிக்காவுக்கு போறோம் ; விளையாண்டே ஆவுறோம், அவ்ளோதான் ஆங்” என இந்திய கிரிக்கெட் அணிகளை தென்னாப்பிரிக்காவுக்கு அள்ளிக்கொண்டு போய் விளையாட வைத்தது பிசிசிஐ. அதேபோல், 2014ல் மீண்டும் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது, ஐ.பி.எல்.-க்கு இங்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என மத்திய அரசு கைவிரிக்க, அப்போதும் அசராமல் இந்தியாவுக்கு ”பாய் பாய்” சொல்லிவிட்டு முதல் 20 போட்டிகளை ஐக்கிய அமீரகத்தில் நடத்தி காட்டி நாங்களெல்லாம் யாரு தெரியுமா என்ற ரேஞ்சுக்கு நெஞ்சை நிமிர்த்தி நின்றது அதே பிசிசிஐ.


2013-ல் இலங்கை இனப் படுகொலையை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த சூழலில் இலங்கை கால்பந்து வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அதே நேரத்தில் ஏப்ரலில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்கும் அணிகளை சென்னையில் விளையாட அனுமதிக்க முடியாது என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அதன்பிறகு இலங்கை வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டியில் விளையாடமாட்டார்கள் என அறிவித்தும் தனது ஆட்டத்தை தொடர்ந்தது பிசிசிஐ.


இது மட்டுமா? கடந்த 2018ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்னை உச்சக் கட்டத்தில் இருந்தபோது, போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், சாலை மறியல்களும் என தமிழகமே போர்க்களமாக இருந்த சூழலில் கூட,  4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு, கருப்பு சட்டை போட்டு வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு என “காட்டான்” கணக்காக சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்திக் காட்டியது பிசிசிஐ. ”போட்டி நடந்தால் பாம்பு விடுவோம்” என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சொன்னதில் சற்று ஜர்க் ஆனாலும், ”சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு” என்ற ரீதியில் போட்டி தொடங்க, ஆடுகளத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவங்கள் எல்லாம் வரலாறு.


இதெல்லாம் கூட மாநிலம் சார்ந்த பிரச்னைகள்தான். ஆனால் இப்போது நடப்பது என்ன ? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற ரீதியில் ஐபிஎல்-லை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் இல்லாமல்தானே போட்டியை நடத்துகிறோம் இதில் உனக்கென்ன பிரச்னை, யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பார்கள். அப்படி கேட்பவர்கள் எல்லாம் கொஞ்சம் கண்களை அகல விரித்து இந்த நாட்டை, வேண்டாம் உங்கள் சொந்த மாநிலத்தை பாருங்கள். எங்கும் கண்ணீர், கதறல், சடலம் என இந்த கொரோனா சண்டமாருதம் செய்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சிகளில் காட்டப்படும் அழுகுரல்களையும் மூச்சுத் திணறல்களையும் பார்த்தபின்னர் கூடவா, இந்த ஐபிஎல் ஆட்டத்தை பார்த்து உங்களுக்கு உள்ளூர கொண்டாடத் தோன்றுகிறது?ஐபிஎல்லில் ஒவ்வொரு பவுண்டரிகள் அடிக்கப்படும்போதும் இந்தியாவில் எங்கோ ஓர் இடத்தில் ஒரு உயிர் பிரிந்து போவது உங்களுக்கு தெரியவில்லையா? அப்படி உயிர் பிரிந்துப்போகையில் நாம் எப்படி உவகைகொள்ள முடியும்?


 



ஐ.பி.எல் போட்டிகளே வேண்டாம் என்று சொல்லவில்லை ; இந்த நேரத்தில் அதனை நடத்துவது சரியில்லை என்றுதான் சொல்கிறோம். இப்போதைக்கு மக்களுக்கு விழிப்புணர்வும், சுய சுத்தமும், பாதுகாப்பும் தேவைப்படும் அளவுக்கு வேறு எதுவும் தேவையில்லை. ஐபிஎல் போட்டிகளை ஒத்திவையுங்கள் ; இந்தியாவின் அவசர நிலையை உணருங்கள் !