ஒருவர் நிர்வாகப் பதவியில் நிரந்தரமாக நீடிக்க முடியாது என பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி தனது எதிர்காலத்திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகியாக தனது காலத்தை வாழ்ந்ததாகவும், ஆனால் ஒருவரால் எப்போதும் விளையாடிக் கொண்டே இருக்க முடியாது, எப்போதும் நிர்வாகத்தில் இருக்க முடியாது என்றும் கூறினார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பிசிசிஐ தலைவராக பதவியேற்க உள்ளார் என்கிற தகவல் கசிந்து வரும் நிலையில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.





“நான் ஐந்து வருடங்கள் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தேன். நான் பல ஆண்டுகளாக பிசிசிஐ தலைவராக இருக்கிறேன். ஒரு நிர்வாகிப் பொறுப்பில் இருப்பவர் நிறைய பங்களிக்க வேண்டும் மற்றும் அணிக்கான விஷயங்களைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரராக, நீண்ட காலமாக இருந்த எனக்கு அது புரிந்தது. நான் ஒரு நிர்வாகியாக எனது நேரத்தை முழுமையாக பயன்படுத்தி வாரியத்துக்குப் பங்களித்தேன். ஒருவர் எப்போதும் விளையாட முடியாது, நிர்வாகத்தில் நிரந்தரமாக இருக்க முடியாது. அனைத்து பதவிகளுக்கும் முடிவு காலம் உண்டு” என்று கங்குலி கூறினார்.


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் வீரர்களில் ஒருவரான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக, அடுத்த பிசிசிஐ தலைவராகவும், பொருளாளர் அருண் துமாலுக்குப் பதிலாக  பாஜக எம்எல்ஏ ஆஷிஷ் ஷெலார் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட உள்ளதாக வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்  செயலாளராக ஜெய் ஷா தனது பதவியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வார்.


அக்., 11ல், மும்பையில் உள்ள டிரைடென்ட் ஓட்டலில் நடந்த பிசிசிஐ கூட்டத்தில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், வாரியத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். அக்டோபர் 18 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தேர்தலுக்கு முன்னதாக  பிசிசிஐ கூட்டத்தில் இதுகுறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.


மூத்த பிசிசிஐ நிர்வாகி ராஜீவ் சுக்லா வாரியத்தின் துணைத் தலைவராக இருப்பார், அருண் துமாலுக்குப் பதிலாக ஆஷிஷ் ஷெலர் புதிய பொருளாளராகப் பதவியேற்க வாய்ப்புள்ளது.


பின்னி முன்பு பிசிசிஐ தேர்வுக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார், மேலும் அவர் 1983 உலகக் கோப்பை வென்ற அணியிலும் உறுப்பினராக இருந்தார். பிசிசிஐ தலைவராக கங்குலிக்கு பதிலாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 67 வயதான பின்னி தற்போது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார்.


அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது, வேட்புமனுக்கள் பரிசீலனை அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெறும் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம்.


பிசிசிஐயின் தற்போதைய தலைவரான சவுரவ் கங்குலி, 16 உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாரியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான இந்தியாவின் பிரதிநிதியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.