ஒடிசாவில் வெள்ளிக்கிழமையன்று மூன்று ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் இதுவரை 260க்கும் மேலானவர்கள் உயிரிழந்தத நிலையில், 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. சமீப காலங்களில் மட்டுமல்ல, சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது மாறியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில், இந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து, கெய்சல் (1999) மற்றும் ஞானேஸ்வரி (2010) இரண்டையும் ஒத்துள்ளது.


கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து


வெள்ளிக்கிழமை, சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலாசோரில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே, ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தடம் புரண்ட ஹவுரா செல்லும் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. அப்போது தடம் புரண்ட கோரமண்டலின் பெட்டிகள் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது.



2009-இல் இதைப்போலவே ஒரு ரயில் விபத்து


கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12842) சென்னை மற்றும் ஷாலிமார் (ஹவுராவில்) இடையே 1,662 கிமீ தூரத்தை 27 மணி 5 நிமிடங்களில் கடக்கிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸின் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கிமீ ஆகும். நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த இந்த சோக சம்பவம் 2009-இல் இதே போல ஒரு வெள்ளிக்கிழமை, இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதை ஞாபகப்படுத்தியுள்ளது. அப்போது நடந்த அந்த விபத்தில் சுமார் 16 பயணிகள் உயிரிழந்தனர். அந்த விபத்து பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற்றது குறி்ப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்: Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் 280 உயிர்கள் பறிபோன சோகம்.. ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்


2009 விபத்தின் நிலை


2009 ஆம் ஆண்டு இந்த ரயில் ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையத்தை, அதிவேகத்தில் கடந்து சென்று தடம் மாறிக் கொண்டிருந்தபோது விபத்து நடந்தது. ரயிலின் என்ஜின் ஒரு தண்டவாளத்தில் சென்று கவிழ்ந்த நிலையில் பெட்டிகள் நாலாபுறமும் சிதறியது. 2009 விபத்தும் மாலை நேரத்தில் தான் நடந்தது, இரவு 7.30 முதல் 7.40 க்குள் அந்த விபத்து நடைபெற்றது.



தற்போதைய விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கைகள்


தற்போது மூன்று ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 260-ஐ எட்டியுள்ளது. மேலும் உடல்கள் மீட்கப்படுவதாலும், மோசமான காயமடைந்தவர்கள் உயிருக்கு போராடுவதாலும் எண்ணிக்கை 280-ஐ தாண்டலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒன்றன் பின் ஒன்றாக மோதிய சத்தம் கேட்டதாகவும், அவர்கள் அந்த இடத்தை அடைந்தபோது, சுற்றிலும் சிதைந்த உடல்கள் மட்டுமே கிடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அதில் சில பெட்டிகள் மற்றவற்றை விட குறைவாகவே பாதிப்படைந்து இருந்தன. "நாங்கள் திடுக்கிட்டோம், திடீரென்று ரயில் தடம் புரண்டதன் வேகத்தால் எங்களில் பலர் பெட்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டோம். நாங்கள் ஊர்ந்துதான் வெளியில் சென்றோம், அப்போது பல உடல்கள் அங்கு சிதறி கிடப்பதைக் கண்டோம்," என்று ஒரு பயணி கூறினார்.