Mumbai Facebook Gun Shot: மும்பையில் ஃபேஸ்புக் நேரலையின் போது அரசியல் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஃபேஸ்புக் நேரலையில் கொலை:
உத்தவ் தாக்ரே சிவசேனா பிரிவைச் சேர்ந்த அபிஷேக் கோசல்கர், ஃபேஸ்புக்கில் நேரலை செய்து கொண்டிருந்த போது ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதோடு, தாக்குதல் நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் ஃபேஸ்புக் நேரலையில் பதிவாகியுள்ளது. தஹிசார் பகுதியில் உள்ள MHB காலனி காவல் நிலைய எல்லைக்குள் நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடந்தது என்ன?
கோசல்கர், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவின் முன்னாள் கவுன்சிலரான வினோத் கோசல்கரின் மகன் ஆவார். துப்பாக்கிச் சூடு நடத்திய மோரிஷ் எனும் நபருக்கும், கோசல்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இதையடுத்து, மவுரிஸ் பாய் என்று பிரபலமாக அறியப்படும் மொரிஸ் நோரோன்ஹாவில் நடைபெற்ற, தனது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். அந்த ஃபேஸ்புக் நேரலை நிகழ்ச்சி முடிவுற்ற சமயத்தில் தான், மோரிஷ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் 3 முறை கோசல்கரை சுட்டுள்ளார். இதில் காயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து வெளியேறியுள்ளார். அதேநேரம், மோரிஷ் உடனே தன்னை தானே சுட்டு உயிரிழந்துள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோசல்கர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் சாடல்:
ஏக்நாத் ஷிண்டே பிரிவின் தலைவரான மகேஷ் கெய்க்வாட் மீது, காவல்நிலையத்தில் வைத்தே பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அண்மையில் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஃபேஸ்புக் நேரலையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை உத்தவ்தாக்ரே தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமாக சட்ட-ஒழுங்கு மாநிலத்தில் சீர்கெட்டு இருப்பதாகவும், டிரிபிள் இன்ஜின் அரசு செயலற்று இருப்பதாகவும் சாடியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்ரே பேசுகையில், “மகாராஷ்டிராவிற்கு இதனால் அவதூறு ஏற்பட்டது மட்டுமின்றி, மக்களும் பயப்படுகிறார்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தொழில்துறை முதலீடுகள் மகாராஷ்டிராவிற்கு வராது எனும் மோசமான சூழல் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது" என கவலை தெரிவித்துள்ளார்.