பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இளைஞருடன் ஏற்பட்ட கைகலப்பில் காவல் அதிகாரி ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில் இளைஞர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த காவல் அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இணையத்தில் வைரலான காட்சிகளின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நடந்தது என்ன?
பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டம் தேரா பாசி பகுதியைச் சேர்ந்த காவல் அதிகாரி பல்வீந்தர் சிங். இவர் முபாரிக்பூர் காவல் நிலையத்தில், துணை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். இந்நிலையில் இன்று இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அந்த சண்டையில் இன்னும் சில பொதுமக்களும் சேர்ந்து கொண்டனர். எல்லோரும் சேர்ந்த அந்த இளைஞருக்கு ஆதரவு தெரிவித்தனர்.


இதனால் ஆத்திரமடைந்த அந்த போலீஸார் இளைஞரின் தொடையில் துப்பாக்கியால் சுட்டார். இதனால் அந்த நபர் படுகாயமடைந்தார். உடனே அவரை பொதுமக்கள் அருகிலிருந்த தேரா பாஸி சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


பல்வீந்தர் சிங் அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்ட காட்சி இணையத்தில் வைரலானது. இதனைவைத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 324, 354 ஆகியனவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை தலைவர் விவேக் ஷீல் சோனி கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக பல்வீந்தர் உள்பட மூன்று போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு புலணாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


இந்த வீடியோ குறித்து பாதிக்கப்பட்ட நபரின் சகோதரர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், நாங்கள் ஹேபத்பூர் சாலையில் நின்றிருந்தோம். அப்போது காவல்துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் எனது மனைவியின் கைப்பையை சோதனை செய்ய முற்பட்டனர். அதனை நான் தடுத்தேன். அதற்காக என் சகோதரரின் காலின் அவர்கள் சுட்டுவிட்டனர் என்றார்.


ஆனால், அந்த காவலரோ  “நான் தற்காப்புக்காகவே சுட்டேன். என்னுடன் அவர்கள் அனைவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு குடும்பமே இருந்தனர். நான் தனியாள். அதனாலேயே சுட்டேன். என்னுடன் இருந்த இன்னொரு காவலரின் சீருடையை அவமதிக்கும் செயலிலும் அந்த நபர் ஈடுபட்டார். நாங்கள் ரோந்துப் பணியில் இருந்தோம். எங்களின் கடமையையே செய்தோம். அவர்களிடம் எங்கிருந்து வருகிறார்கள். என்ன செய்கிறார்கள் என்று தான் விசாரித்தோம். அவர்கள்தான் சண்டையிட்டனர்” என்றார்.


ஆனால், இந்த வீடியோ பஞ்சாப்பில் அரசியலாகிவிட்டது. இதனை வைரலாக்கும் பாஜகவினர், பஞ்சாப் ஆம் ஆத் ஆத்மி அரசின் கீழ் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடப்பதாகக் கூறி வருகின்றனர்.