கடந்த நவம்பர் 6ம் தேதி தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பேருந்துகளை கேரள போக்குவரத்து துறையினர் திடீரென சிறை பிடித்து அவற்றில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கி விட்டுள்ளனர். மேலும், பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை நிறுத்துவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தன.

Continues below advertisement




இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து இயக்கத்தையும் நிறுத்துவதாக தமிழக அனைத்து ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் கூட்டறிக்கை வெளியிட்டு அம்னி பேருந்துகள் பேருந்து நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் வழக்கம் போல அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.


இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் அ.அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் நவ.7-ஆம் தேதி தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்குச் சென்ற 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரள போக்குவரத்து துறையினா் சிறைபிடித்து, ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தனா். இதேபோன்று கா்நாடக போக்குவரத்து துறையும் 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளைத் தடுத்து, தலா ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்தது.




இதைத் தொடா்ந்து, நவ.7-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு இயக்கப்படும் 230 ஆம்னி பேருந்துகள் கடந்த 21 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து, நவ.10-ஆம் தேதியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாமல் கடந்த 18 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், தினசரி 25,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்படைந்ததுடன், உரிமையாளா்களுக்கு தினசரி சுமாா் ரூ.4 கோடி என 21 நாள்களில் மொத்தம் ரூ.84 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் பாதிப்படைந்தனா்.


இதுதொடா்பாக அரசுக்கும், போக்குவரத்துத் துறைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா். இதனால், பயணிகள் நலனையும், ஐயப்பன் கோயில் பக்தா்கள் நலனையும் கருத்தில் கொண்டு, வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மீண்டும் வழக்கம்போல இயங்கும் எனத் தெரிவித்துள்ளாா்.