ஓமிக்ரான் பரவலால் உலகமே அலறிக் கொண்டிருக்கும் சூழலில் அது கொண்டு பெரிதாக பீதியடைய வேண்டாம். அது வெறும் வைரஸ் காய்ச்சல் தான் என்று கூறியுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத். 


கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் திரிபு கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிட்டது.


அமெரிக்காவில் அன்றாடம் சர்வ சாதாரணமாக 5 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகிறது. பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி என ஐரோப்பிய நாடுகள் பல ஆட்டம் கண்டுள்ளன. இஸ்ரேலில் ஓமிக்ரானைக் கட்டுப்படுத்த 4 வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் ஓமிக்ரான் பரவ ஆரம்பித்துவிட்டது. இன்றைய நிலவரப்படி 1700 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 510 பேருக்கு ஓமிக்ரான் உறுதியாகியுள்ளது. அன்றாட கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.


இதனால், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஓமிக்ரான் பரவலால் உலகமே அலறிக் கொண்டிருக்கும் சூழலில் “அது கொண்டு பெரிதாக பீதியடைய வேண்டாம். அது வெறும் வைரஸ் காய்ச்சல் தான்” என்று கூறியுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத். 


அவர் ஓமிக்ரான் குறித்து கூறுகையில், "ஓமிக்ரான் மற்ற வைரஸ்களைக் காட்டிலும் அதி வேகமாகப் பரவக் கூடியது. ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மக்கள் பீதியடைய வேண்டாம். இரண்டாவது அலையில் தாக்கம் ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போன்று ஆபத்தானது இல்லை. ஓமிக்ரான் திரிபு ஒப்பீட்டு அளவில் பலவீனமானது. எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை அவசியம்.  ஓமிக்ரான் பரவைத் தடுக்கவும் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். டெல்டா பாதிப்பின் போது மக்கள் அந்த நோயில் இருந்து மீள குறைந்தது 15 நாட்களாவது ஆகியது. சிலருக்கு நோய் பூரணமாக விலக 25 நாட்கள் ஆனது. போஸ்ட் கோவிட் பாதிப்புகளும் இருந்தன. ஆனால் இவையெல்லாம் ஓமிக்ரானில் இல்லை. அதனால் கொரோனா வைரஸ் நாளடைவில் பலவீனமடைந்துள்ளது என்று கூறினார்.






ஓமிக்ரான் பரவலால் உத்தரப்பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


ஓமிக்ரான் பாதிப்பு மாநில வாரியாக..


மகாராஷ்டிரா: 510, டெல்லி: 351, கேரளா: 156, குஜராத்: 136, தமிழகம்: 121, ராஜஸ்தான்: 120 என நாடு முழுவதும் 23 மாநிலங்கள் மட்டும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரான் பரவியுள்ளது.