ஆந்திராவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ஆந்திராவில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 10 ஆம் தேதி 39 வயது பெண் ஒருவர் கென்யாவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். அங்கிருருந்து காரின் மூலம் திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அர்டிபிசிஆர் டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 12 ஆம் தேதி அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவரின் மாதிரி ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு சோதனைகள் ஆர்டி பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. அவர்கள் ஆரோக்கியமுடன் உள்ளனர். எனினும் அவர்கள் சுகாதாரத்துறை கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பெண்ணுடன் ஆந்திர மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவருடன் பயணித்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் மாதிகளை ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயப்பட வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். மாஸ்க் அணியுங்கள். கைகளை தொடர்ந்து அடிக்கடி கழுவுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுவரை கண்டிராத வேகத்தில் ஒமிக்ரான் பரவி வருவதாகவும் இதுவரை உலக அளவில் 77 நாடுகளில் பரவியுள்ளது எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “77 நாடுகளில் இப்போது ஒமிக்ரான் பதிவாகியுள்ளன. உண்மை என்னவென்றால், ஒமிக்ரான் இன்னும் கண்டறியப்படாவிட்டாலும் கூட, பெரும்பாலான நாடுகளில் இருக்கலாம். ஓமிக்ரான் முந்தைய மாறுபாடுகளுடன் நாம் இதுவரை காணாத வேகத்தில் பரவுகிறது. மக்கள் ஓமிக்ரானை லேசானது என்று நிராகரிக்கின்றனர். இது எங்களுக்கு கவலையை தருகிறது.
தற்போது கடுமையான பாதிப்பு குறைந்த பேருக்கு இருந்தாலும் பின்பு அதிகரிக்கக்கூடும். தடுப்பூசிகளால் மட்டும் எந்த நாட்டையும் இந்த நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முடியாது. தற்போது எடுக்கும் நடவடிக்கைகள் மூலமே ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியும். மாஸ்க்குக்கு பதிலாகவோ, சமூக இடைவெளிக்கு பதிலாகவோ தடுப்பூசிகள் இல்லை. அனைத்தும் முக்கியம். அனைத்தையும் மக்கள் நன்றாக கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.