டெல்லியில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் கார், ஆட்டோ ஆகியவற்றின் டாக்ஸி சேவைகளை கடந்து பைக் டாக்ஸி சேவைகள் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களின் அன்றாட செலவுகளை கவனிக்க இத்தகைய பைக் டாக்ஸி வேலைகள் உகந்ததாக ஏராளமானோர் இதில் இணைந்து சம்பாதித்து வருகின்றனர். வாடிக்கையாளர்களும் பைக் டாக்ஸி சேவை வசதியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கட்டணம், பயண நேரம் குறைவு என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 


பைக் டாக்ஸிகளின் முக்கியத்துவத்தை அறிந்த ஓலா, உபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைக்கு சேருபவர்களையும், வாடிக்கையாளர்களையும் கவர ஆஃபர் மேல் ஆஃபர் வழங்கி வருகின்றனர். அதேசமயம் பைக் டாக்ஸி சேவையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 


மேலும் கார், ஆட்டோ போல பைக் டாக்ஸியில் பாதுகாப்பு அம்சங்களும் குறைவாகவே உள்ளது. இதில் பயன்படுத்தப்படும் பைக்குகளும் சில நேரங்களில் சரியாக பராமரிப்பு படாத பைக், குறிப்பிட்ட வேகத்தை தாண்டி பைக் இயக்கப்படுவது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, சாலை விதிகளை மதிக்காமல் செல்வது என  வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்களும் வந்த வண்ணம் உள்ளது. 


இந்நிலையில்  ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் இருசக்கர வாகன டேக்ஸி சேவைகளுக்கு தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் படி, இருசக்கர வாகனத்தில் வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டத்தை மீறும் செயலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளய்து. 


இத்தகைய பைக் டாக்ஸிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளும்போது எந்தவித சமரமும் செய்ய முடியாது என அரசு விளக்கமளித்துள்ளது. தடை மீறுபவர்களுக்கு  ரூ 10,000 வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து மீறினால் ஓட்டுநர் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு இழக்க நேரிடும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.