மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி வெடித்து சிதறியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


மகாராஷ்டிரா மாநிலம் புனே-மும்பை விரைவுச்சாலையில் இன்று மதியம் 2 மணியளவில் டேங்கர் லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த லாரி லோனாவாலா அருகேயுள்ள மேம்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது தீடிரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் லாரி வெடித்து சிதறியது. இதன் காரணமாக  சுமார் 10 அடி உயரத்திற்கு டேங்கர் லாரியில் இருந்து தீப்பிழம்புகள் எழுந்தது.


மேலும் லாரி வெடித்து சிதறிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவர் 12 வயது சிறுவன் ஆவார்.  லாரியில் இருந்து கசிந்த ரசாயனத்தால் ஏற்பட்ட தீ மேம்பாலத்தின் கீழ் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த சிறுவன் மீது பட்டுள்ளது. இதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். 






இந்த விபத்தால்  புனே- மும்பை விரைவுச்சாலையில்   அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதாவது
நெடுஞ்சாலையின் ஒருபுறம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஒருபுறம் மட்டும் வாகனங்கள் பயணப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும்  காயம் அடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. லாரி வெடித்து சிதறிய சம்பவத்தில் 4 பேர் பலியான தகவல் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.