உத்திரகாசியில் மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் சில்க்யாரா பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது.
அப்போது சுரங்கப்பாதை பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டனர். 10 நாட்களுக்கு மேலாக தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களை வெளியே கொண்டு வர தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, அதிவிரைவு படை என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அங்கிருக்கும் தொழிலாளர்களுக்கு 6 இஞ்ச் பைப் மூலம் உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் முதல் முறையாக மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கேமிரா மூலமும் வாக்கி டாக்கி மூலமும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் இன்று காலை துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீட்புப் பணிகள் சற்று தொய்வடைந்தது. சிக்கிய 41 தொழிலாளர்களைக் காப்பாற்ற மீட்புக்குழுவினர் 24 மணி நேரமும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். மீட்புக் குழுவினர் ஏற்கனவே சுரங்கப்பாதையின் 60 மீட்டர் நீளத்தில் 45 மீட்டர் வரை குழாய்களை அமைத்துள்ளனர். மீட்பு நடவடிக்கைக்கு தேவையான இரண்டு குழாய்களை அமைப்பதில் சவால்களை சந்தித்து வருகிறது. இப்படி தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகளை நேரில் பார்வையிட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் வருகை தந்துள்ளார். சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர், அர்னால்ட் டிக்ஸும் சில்க்யாரா பகுதிக்கு வருகை தந்துள்ளார்.
உத்தர்காஷி மாவட்ட நீதிபதி அபிஷேக் ரூஹெலா கூறுகையில், "நாங்கள் பெரும்பாலான தூரத்தை கடந்துவிட்டோம், இன்னும் கொஞ்சம் வேலை மட்டுமே உள்ளது. நாங்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்களை சமாளிக்க எங்கள் குழுக்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. நிபுணர்கள் மற்றும் திறமையான நபர்களிடமிருந்து நாங்கள் ஆலோசனை பெறுகிறோம், அவர்களில் சிலர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். எப்போது மீட்புப் பணிகள் முடிவடையும் என்று கூற முடியாது ஆனால் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, அதை மாநில மற்றும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இந்திய அரசின் அனைத்து உதவிகளையும் நாங்கள் பெற்று வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.