சபரிமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் ஐயப்ப பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் கேரளாவில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநில பத்தினம் திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கண்ணூர், காசர்கோடு தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சபரிமலை சீசன் வேறு தொடங்கி விட்டதால் கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். கடந்த நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சாமி தரிசனம் செய்யும் நேரத்தை 16 மணி நேரமாக தேவஸ்தானம் போர்டு அதிகரித்துள்ளது. இந்த சபரிமலை ஐயப்பன் கோயில் பத்தினம் திட்டா மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. ஏற்கனவே அங்கு மழை பெய்து வருவது பக்தர்களுக்கு இடையூறாகவே இருந்து வருகிறது.
மேலும் சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள், விமானங்களில் இருமுடிக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சபரிமலை தேவஸ்தானமும், பத்தினம் திட்டா மாவட்ட நிர்வாகமும் சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலக்கலில் இருந்து பம்பைக்கு செல்லும் இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் பக்தர்கள் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Sabarimala Ayyappan Temple: களைகட்டும் சபரிமலை சீசன் ! பக்தர்களுக்காக தரிசன நேரத்தை அதிகரித்த தேவஸ்தானம் போர்டு!